பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

159


எரோடாட்டசு முதலியோர் குறிப்புகளால் ஆண் மக்களால் ஈட்டப்படும் பொருள் வகையுள் ஒன்றாகவே மகளிர் கருதப்பட்டமை தெரிகிறது. மக்களைப் பெறுதலும் வளர்த்தலும் குடும்பத் தொழில்களைச் செய்தலுமே அவர்கட்குச் சிறந்த பணிகளாகக் குறிக்கப்படுகின்றன. எகிப்தியர்கள் மகளிர் பலரை மணந்துகோடல் மரபாகக் கொண்டனர். தொடக்கத்தில் அஃது அரசர்பால் தோன்றி நாளடைவில் யாவர்க்கும் எய்துவதாயிற்று. இசுலாம் சமயம் பரவிய பின் எகிப்து மன்னர் மகளிர் பலரை மணத்தல் கடமையாகக் கொண்டனர். ஒருவன் தான்கொண்ட மனைவியர் பலரும் அவர் வயிற்றிற் பிறக்கும் மக்களும் தனக்குக் கிடைத்த செல்வமாகக் கருதினான். அவர் அனைவருடைய உழைப்பும் குடும்பத்துக்குப் பொருள் வருவாயாக இலங்கிற்று. வென்ற வேந்தர் தோற்றோர்டால் பெறப்படும் திறைப் பொருளாக மகளிரைப் பெறுவது அந்நாளைய இயல்பு. வேந்தரைக் காணச் செல்லும் தலைவர்களும் செல்வர்களும் இளமகளிர் பலரை அவர்கட்குப் பரிசுப் பொருளாகவும் வழங்கினரென எகிப்து நாட்டு வரலாறு கூறுகிறது. இம்மனைவியர்க்கு வேறாக இற்பரத்தையராக நூற்றுக் கணக்கில் மகளிரைத் தொகுத்து வைத்தல் மேலை நாட்டு அரசர் செயல்முறையாக இருந்திருக்கிறது. இவ்வழக்கம் கிரேக்கர் யவனர் முதல் பாபிலோனியர் கிசியர் ஈறாக எல்லோரிடையும் இருந்துளது. அரபியர் மாத்திரம் இத்துறையில் ஓரளவு உயர்ந்த நோக்கம் கொண்டனர். ஆண் மக்களைப் போலப் பெண்ம்க்களும் அரசியல் வகைகளிலும் போர்த் துறையிலும் சிறந்த பங்கு கொண்டனர். முறை புரிதல். படைக்கலம் பயிறல், படைத்தலைமை தாங்கல் முதலியவற்றில் மகளிர் ஆடவரையொப்ப விளக்க முற்றனர். அறிவாராய்ச்சி, இசை, கூத்து, இலக்கியப் புலமை, இனிய சொல்வன்மை என்ற நலம்பல வற்றில் மகளிர் சிறப்புற்றுத் திகழ்ந்தனர். ஆடவர் அனைவரும் மணம் புரிந்துகோடல் இன்றியமையாதது; மண்மாகாமை ஓர் ஆடவனுக்கு இழிவையும் பழிப்பையும் நல்கிற்று. மக்கட் பேற்றுள் ஆண்மகப்பேறு கடவுள்பால் பெறலாகும் பேரருளாகக் கருதப்பட்டு வந்தது.

மேலைநாட்டுப் பாலை நிலப்பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் பெண் மக்களைப் பெருஞ்சுமையாகவும்