பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

219


வழிபாட்டுரிமைக்கு வழிகாட்டியா யிருந்தும், இலக்கியங்கள் இவ்வுரிமையை உணர்ந்து நன்கு வற்புறுத்தா தொழிந்தது மறைக்க முடியாத உண்மையாகும்.

ஆகவே, இன்று நாம் எய்தி இன்புறும் உரிமை வாழ்வில் எழும் இலக்கியங்கள், இதுகாறும் கூறிப் போந்த பேச்சுரிமை, வழிபாட் டுரிமை, வறுமை யின்மை, அச்சமின்மை, ஒப்புரவாண்மை என்ற பொது வறங்களை வாய்க்கும் போதெல்லாம் வற்புறுத்தும் பெரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணியைச் செம்மையாகவும வெற்றியுண்டாக்கு முறையிலும் செய்வதற்கு இலக்கிய ஆசிரியர்கள் உள்ளத்தில் வேரூன்றியிருக்க வேண்டிய கொள்கையொன்று உளது. அஃதாவது தங்கள் மொழி நிலவும் நாட்டின்பால் அயரா அன்புடைமையாகும். அந்த அன்பு அவர்கள் நெஞ்சில் எழும் ஒவ்வொரு நினைவிலும், வாயில் எழும் ஒவ்வொரு சொல்லிலும், எழுதும் ஒவ்வொ ரெழுத்திலும் விளங்குதல் வேண்டும். கம்பன் கருத்து முற்றும், கோசல நாட்டையும் இலங்கை நாட்டையும் கவ்விக்கொண்டு கிடந்தது; கச்சியப்பர் கருத்து வேறுலகத்தில் உலாவிற்று. திருத்தக்க தேவர் கருத்து ஏமாங்கத நாட்டிலும் அதனைச் சூழ்ந்த நாடுகளிலும் திரிந்தது. கொங்கு வேளிர் கருத்து, தமிழகத்தைத் தொடவே இல்லை. இடைக்காலத் தெழுந்த திருத்தொண்டர் புராணம் தமிழ் நாட்டையே பற்றுக் கோடாகக் கொண்டிருந்த தெனினும், கயிலாயத்தையும் பிறவற்றையும் அது கைவிடவில்லை. சிலப்பதிகாரமும் மணிமேகலையுமாகிய இரண்டுமே தமிழகத்தை விடாது நின்றன. அதனால், தமிழகத்தின் பழங்கால நிலையினை ஓரளவிலேனும் நாம் உணர்ந்து கோடற்கு உதவியாயின. ஏனைய யாவும் யாம் மேலே கூறிய தாய்மொழி நிலவும் தாய் நாட்டன்பு விளங்கித் தோன்றும் வீறு நிறைந்த நினைவும் சொல்லும் எழுத்தும் உடைய வல்ல வாயின. இதன் விளைவு தமிழகம் உரிமை யிழந்து அடிமை யுற்று வருந்தும் நிலைமையைப் பயந்தது.

தாய் நாட்டன்பின் இன்றியமையா இயல்பினை, மேலை நாட்டவர் நன்குணர்ந் திருந்தமையால் ‘உரிமை வாழ்வே’