பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

167


அதனினும் மிக்க வருத்தம் தருவது. வேறு கிடையாது. உலக நாடுகளில் எங்கு நோக்கினும் மகளிர்க்குரிய இவ் வியல்பு ஒன்றாகவே உள்ளது, மேலை நாடுகளிலுள்ள எகிப்து, அபிசீனியா முதலிய நாடுகளிலும் கீழ் நாட்டுச் சீனம் சப்பான் நாடுகளிலும் உள்ள மகளிர் எப்போதும் கணவனுடைய மன நிறைவையே குறிக்கோளாகக் கொண்டு ஒழுகுவர். சில நாட்டு மகளிர் தாம் செய்யும் ஒவ்வொரு செயலும் கணவற்கு உவகை தருகிறதா என்பதை அடிக்கடி கேட்டு அறிந்து கொள்வர். அதனால், கணவனது காதலன்பு பிற மகளிர்பால் செல்லாது. காத்தொழுகுவதை அவர்கள் கண்ணும் கருத்துமாகக் கொண்டிருந்தனர். உருசிய நாட்டுப் பழங்குடி மக்களும், அமெரிக்க நாட்டுச் செவ்விந்தியரும் ஆடவரினும் மகளிரைத் தாழ்ந்தவராகக் கருதி ஒழுகுபவராயினும், அவர் நாட்டு மகளிர்க்குக் கணவன்பால் பரத்தைமை தோன்றின் பெரிதும் வருந்துவதை அவர் நாட்டு வரலாறு கூறுகின்றது. சுமேரியா நாட்டில் மகளிரிடையே பரத்தைமை யொழுக்கம் பெரிதும் பரவியிருந்தது; எனினும், மனையறம் பூண்ட மகளிர் கணவன் பரத்தனாவது காண மிகவும் அஞ்சியொழுகுகின்றனர்.

மேலே காட்டிய பழங்குடிகளோடு எவ்வகையிலும் பிற்படாத தொன்மை வாய்ந்த தமிழ் மகளிர் விலக்கல்லராகலின், கணவனது பரத்தைமை மனையுறையும் மக்களுக்கு மிக்க வருத்தத்தை விளைவித்தது. தன்னைக் கொண்ட கணவன் தன்னையொழியப் பிறமகளிரைக் கனவினும் கருதாத பேராண்மையுடையனாகப் பெறின் பெண்டிர் புத்தேளிர் வாழும் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவர் என்று பொருள் கொள்ளத்தக்க வகையில், “பெற்றாற் பெறிற் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு” என்ற திருக்குறள் அமைந்திருக்கிறது. கணவன்பரத்தனாயின் அது தனக்குச்சிறுமை பயப்பதோடு தன் குடிக்கும் பழி தரும் என்ற கருத்தால் தமிழ் மகளிர்அவன் உள்ளம் அந்நெறியிற் செல்வதை விரும்பவில்லை. “பூவோரனையர் மகளிர், வண்டோரனையர் ஆடவர்” என்ற கருத்தொன்றும் அந்நாளில் மக்களிடையே நிலவியிருந்தது. என்றாலும் மகளிருள்ளம் கணவனது காதல் பிறமகளிர்பால் பரவுவதைச் சிறிதும் உடன்படவில்லை.