பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. பூனைக்கு இடம் கொடுத்து மாண்ட கழுகு

கங்கைக் கரையில் திரிகூட மலை என்று ஒரு மலையிருந்தது. அதற்கப்பால் ஒரு பெரிய இத்தி மரம் இருந்தது. அந்த மரப்பொந்தில் ஒரு கிழட்டுக் கழுகு வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு கண்ணும் தெரியாது, கால்களில் நகமும் கிடையாது. அதற்காக இரக்கப்பட்டுக் காட்டில் உள்ள பறவைகள் எல்லாம் தாந்தாம் தேடுகின்ற இரையில் சிறிது சிறிது கொண்டு வந்து கொடுத்து அதைக் காப்பாற்றி வந்தன.

ஒரு நாள் அந்த இடத்திற்குப் பூனையொன்று வந்து சேர்ந்தது. அது பறவைகளின் குஞ்சுகளைப் பிடித்துத் தின்னும் நோக்கத்தோடு தான் அங்கே வந்தது. அந்தப் பூனையைக் கண்டதும் அங்கிருந்த பறவைக் குஞ்சுகளெல்லாம் பதை பதைத்துக்கத்தின. கண் தெரியாத அந்தக் கிழக்கழுகு ஏதோ கெடுதல் வந்து விட்டதென்று துடித்து அந்தக் குஞ்சுகளைப் பார்த்து, ‘ஏன் பயந்து கத்துகிறீர்கள்’ என்று கேட்டது.

இதற்குள் அந்தப் பூனை தந்திரமாக நாம் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி, கழுகின் முன்போய் நின்றுகொண்டு, 'ஐயா, வணக்கம்' என்று கூறியது.