பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

பஞ்ச தந்திரக் கதைகள்


'என்னென்ன நோன்புகள் நோற்க வேண்டும் என்று எண்ணினேனோ அத்தனை நோன்பும் நான் செய்து முடித்து விட்டேன். இவற்றிற்கெல்லாம் மேலாக, நாள்தோறும் பொய் சொல்லாமை என்னும் புண்ணிய நோன்பு ஒன்றையும், உயிர்களைக் கொல்லுவதில்லை என்கிற உயர்ந்த நோன்பு ஒன்றையும் கைக் கொண்டு வருகிறேன். வழக்கில் நான் என்றும் ஓரம் சொல்லேன்.

‘அருகில் வந்து நீங்கள் உங்கள் வழக்குகளை ஏடுத்துரைத்தால் தான் எனக்குக் காது நன்றாகக் கேட்கும். நீங்கள் தொலைவில் நின்று கொண்டு சொன்னால் ஒன்றும் சரியாகக் கேட்காது. எதையும் தெளிவாகக் கேட்டால்தான் நியாயம் தப்பாமல் தீர்ப்பளிக்க முடியும். அருகில் வாருங்கள்!' என்று பூனை அழைத்தது.

பூனை உண்மையையே பேசுகிறது என்று எண்ணிய முயலும் மைனாவும் பூனை அருகில் மிகவும் நெருங்கிச்சென்றன. உடனே பூனை அவை இரண்டையும் தன் இரு கைகளானும் சடக்கெனப் பிடித்துக் கழுத்தைக் கடித்து இரத்தம் குடித்தது.

பாவம் வழக்குரைக்க வந்த முயலும் மைனாவும் அதன் வயிற்றுக்கு இரையாகி விட்டன.

வஞ்சகர்களைச் சேர்ந்தோர் வாழ்வதில்லை என்ற உண்மை இந்த கதைலிருந்து தெளிவாகத் தெரிகிறது.