பக்கம்:குதிரைச் சவாரி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“ஐயோ குதிரைக்கார முனுசாமி என்ன சொல்லுவானோ?... என்ன செய்வானோ? ... என்மேல் என்ன குற்றம்? எல்லாம் அந்தப் பாழாய்ப்போன துஷ்டப் பையன்களால் வந்த வினை தானே! ... யார் குற்றமானாலும் , குதிரைக்காரன், சும்மா விடுவானா?”

இப்படி அவன் ஏதேதோ எண்ணினான். நேரம் ஆக ஆகப் பயம் அதிகரித்தது. பேசாமல் வீட்டுக்குப் போய் விடுவதுதான் நல்லது என்று நினைத்தான் . அழுகையை அடக்கிக்கொண்டு, வீட்டை நோக்கி நடந்தான்.

அப்போது அவனுக்குப் பற்பல எண்ணங்கள் தோன்றின.

“நான் இருக்கும் வீதிப்பெயர்கூட அந்தக் குதிரைக் காரனுக்குத் தெரியுமே! வீட்டுக்கு வந்துவிட்டால், என்ன செய்வது ? அப்பாவிடம் வந்து, குதிரை வேண்டும். அல்லது குதிரை விலையைத் தந்தால்தான் விடுவேன் என்று சொன்னால், என்ன பண்ணுவது ? அப்பா என்னைச் சும்மா விடுவாரா ? சரியாக அடி கிடைக்கும். அடி கிடைத்தால்கூடப் பரவாயில்லையே! பணம் கேட்டால், பணத்துக்கு அப்பா எங்கே போவார் ? என்னவெல்லாம் நடக்குமோ ?” என்று ஒரே கவலையாக வீட்டை அடைந்தான்.

நடந்ததைப்பற்றி அப்பா அம்மாவிடம் ஒன்றுமே கூறவில்லை. கூறினால் என்ன நேருமோ, ஏது நடக்குமோ என்று எண்ணி, பேசாமல் இருந்துவிட்டான். ஆனாலும், அவன் மனம் சும்மா இருக்குமா ? உறுத்திக்கொண்டே இருந்தது. இரவு முழுவதும் சரியான தூக்கம் இல்லை.

மறுநாள் விடிந்தது. குதிரைக்கார முனுசாமி வந்து விடுவானோ. வந்துவிடுவானோ என்று பயந்துகொண்டே இருந்தான் மோஹன். தெருப்பக்கமே தலை காட்டவில்லை.