பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

இந்திய சமுதாய... /போராட்டப் பெண்மை


வெள்ளைக்கார அரசுக்குப் பதிலாக இவ்வாறு அவர்களுக்குச் சமமாகச் செல்வ போகங்களை நிலைப் படுத்திக் கொண்ட ஒரு குடும்பம், தேசியத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு, சாமானிய மனிதர்களைச் சமமாகக் கருதியதால், அந்தக் குடும்பத்தின் தலைமகனை மக்கள் தங்கள் தலைவராகச் சிறப்பித்து ஏற்றுக் கொண்டது இயல்பேயாகும்.

அந்நாட்களில் கங்கை நதி பாயும் பிரதேசத்துக் கிராமங்களில் இருந்து அலாஹாபாதுக்கு வந்த எளிய மக்கள் எவரும் ஆனந்தபவனத்துப் பெருமகனாரை, அவர் புதல்வரை, அரசிளங்குமரிகள் போல் உலவிய பெண் மக்களைக் கண்டு பிரமிப்புடன் கண்டு பணிந்து செல்வார்களாம். இந்தச் சிறப்பு ஏனைய பிற தலைவர்களுக்கு இல்லை.

காந்தியடிகள் மேல்நாட்டில் பாரிஸ்டர் பட்டம் பெறப் படிக்கச் சென்றார். அவருக்கு அப்போது, தொழில் செய்தல் இன்றியமையாத தேவை - குடும்பத் தேவை என்றே கொள்ளலாம். அந்தப் பின்னணியே வேறு. தாய் தன் மகனிடம் மது, மாமிசம் தொடாதவாறு சத்தியம் வாங்கிக் கொண்டார்.

ஆனால், நேரு குடும்பத்தினர், உயர்ந்த பிராமண வருக்கம். மேல்நாடு செல்வது, செல்வச் செழிப்பின் உயர்வுக்குரிய கவுரவமாக இருந்தது. பள்ளிப் படிப்பையே வெள்ளைக்காரர் சீமையில் பெறும் மேன்மையில் திளைத்தனர்.

தங்கள் குடும்பம், செல்வம், அறிவு, முற்போக்கான தேசிய சிந்தனை, எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்பதால், மக்கள் உவந்து அளிக்கும் தலைமைச் சிறப்புக்கு உரியது என்ற மேலான எண்ணம் பாலில் கரைந்த நெய்ப்பொருள் போல் சிறுமி இந்திராவுக்கும் இல்லாமலில்லை. இந்த உணர்வே தன்னை மிக வித்தியாசமாக வெளிப்படுத்திக்