பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



30

இந்திய சமுதாய.../தாய்மையின் வீழ்ச்சி

படும் கொடுமைக்குள்ளாவார்கள். ஆனால், இந்த வழிபாட்டு நாட்களில், பிராம்மணர் முதலிய உயர்குலத்தார், அன்று ‘மாதம்ம’ ஆவி வந்த பெண்ணின் வாயிலிருந்து துப்பப்படும் எச்சிலுக்காக வரிசை நிற்கிறார்கள்; அவர்கள் பாடும் பழி வசைப்பாடல்களை ஆசிகளாக ஏற்கிறார்கள். உயர்குல ஆண்கள் தம் முப்புரி நூலைக் கழற்றிக் கொடுக்கிறார்கள்; பெண்கள் தம் சேலை-ரவிக்கைகளை அவிழ்த்துக் கொடுக்கிறார்கள்.

இந்த வழிபாடு, ஒரு பழிவாங்கும் வடிவாகவே பிரதிபலிக்கிறது.

இந்த வரலாறு, தமிழ்நாட்டின் சில பகுதிகளில், இப்படியும் கூறப்படுகிறது.

பரசுராமன் தன் தாயை வெட்ட வாளுடன் ஓடிவந்த போது, ரேணுகை அஞ்சி நடுநடுங்கி வெளியே ஓடுகிறாள். காடு மலை என்று ஓடும்போது எதிர்ப்படும் தாழ்ந்த குலப் பெண்ணொருத்தியைக் கட்டிக் கொள்கிறாள். அப்படிக் கட்டிக் கொள்வதன் மூலம், இன்னொரு பெண்ணுக்கு ஊறு விளைவிக்கத் துணியாத பரசுராமன் தன்னை விட்டு விடுவான் என்று அவள் கருதியிருக்கிறாள். ஆனால், பரசுராமனின் வாள் இருவரையும் தலை வேறு முண்டம் வேறு என்று துணித்துவிடுகிறது.

பரசுராமன் தந்தையிடம் தாயை உயிர்த்தெழச் செய்ய வரம் பெற்றதும், அவர் சொற்படி, தாயின் தலையை அவள் முண்டத்தில் சேர்ப்பதற்குப் பதிலாக, பதற்றத்தில், தாழ்ந்த குலப்பெண்ணின் தலையைத் தாயின் முண்டத்தில் சேர்த்து விடுகிறான். ‘மாதங்கினி’ உருவாகிறாள்.

இனியும் பரசுராமன்-மாதங்கினி வரலாறு தொடருகிறது. உயிர்த்தெழுந்த மாதங்கினி அந்த இடத்தைவிட்டு நடக்கிறாள். அவளுடைய உருவத்தைத் தெய்வம்போல் கண்ட ஏனைய தாழ்ந்த குலப்பெண்கள், “எல்லம்மா?” என்று வினவுகிறார்கள்.