பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

191


பெருமை பெறுகின்றன. மருதோன்றிச் சாயங்கள், செயற்கைப் பரிமளங்கள் வண்ண வண்ண வாசனை மலர்கள், வெள்ளிக் கொலுசுகள் முத்துவடங்கள் எல்லாமே உன்னால் பெருமை மிக்க சாதனங்களாகின்றன.! உன் செவிகளும் நாசியும் துளைக்கப்பட்டு அணி பணிகளுக்கு விளக்கம் அளிக்கும் போது நீ உலகை ஏற்றம் புரியச் செய்கிறாய்! உன்னால் ஏழை ஆண் வாழ்கிறான். நீ கை வைத்து அழுத்தும் பல்வேறு சோப்பு, அழுக்கு நீக்கும் கரங்கள், உலகத்து மாசுகளைத் துடைக்கும் வல்லமை பெறுகின்றன. அதனால் கிடைக்கும் ஆணின் பாராட்டினால், நீ சுவர்க்கத்தையே மண்ணுலகில் படைத்து விடுகிறாய்! நீ கையாளும் பாத்திர பண்டங்கள் புதிய விளக்கம் பெறுகின்றன! நீ ஊதாரியாக இல்லாமல் சிக்கனம் கடைப்பிடிப்பவள். போதை மருந்துகளும் குடியும், குடும்ப நலன்களை உறிஞ்சினாலும், நீ அவற்றை மீட்க உயிரையும் கொடுக்கும் பெருந்தகை அல்லவோ? நீ இருக்கும்போது தான் ஆணை வாழ வைக்கிறாய் என்றில்லை! இறந்த பின்னும் வாழ வைக்கிறாய்! அதற்காகவே எரியூட்டப் பெற்றாலும், நானே தவறி விபத்தில் மாட்டிக் கொண்டேன், அவர் குற்றமற்றவர் என்று நினைவு தப்புமுன் வாக்குமூலம் கொடுத்துவிட்டுக் கண் மூடுகிறாய்! மக்கள் பெருக்கத்துக்குத் தன் இனமே காரணம் என்று, உன் இனக்கருவை உவந்து அழித்துக் கொண்டு உலக நலம் பேணுகிறாய்! சமுதாயம், நாடு என்று சகல விளைவுகளுக்கும் நீயே காரணம் என்று விளக்கம் தருகிறாய்! உன் உடம்பு, பெருமை பெற்றது; ஆற்றல் பெற்றது. அறிவு; ஆக்கம்… நீ பலவீனமானவள்; ஓர் ஆண் உன்னைக் காப்பாற்ற வேண்டும்! இத்தகு விளக்கங்கள் தொடர்ந்து, பிம்பங்களின் வாயிலாக, சின்னஞ்சிறு உள்ளங்கள் ஈறாக, முதிர்ந்த முனி உள்ளங்கள் வரை உணர்த்தப் படுகின்றன.

இதனால், யாருக்கு என்ன பயன்?