பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

83


செலுத்துதற்குப் பயன்படுத்தியவர், பண்டைத்தமிழர் என்று சிறப்பித்து, அத்தகைய மரபில் வந்த “கரிகால் வளவா உனக்குத் தோற்ற பெருஞ்சேரலாதன் உன்னாலுண்டாகிய புறப்புண்ணுக்கு நாணி, வடக்கிருந்து உயிர்விட்டான். உன்னைவிட அவன் புகழுக்குரியவன்..” என்று வீரத்தைப் பாடும் இவர் குயவர் மரபினைச் சேர்ந்தவர் என்றே பெயர் குறிக்கிறது.

அக்காலத்தில் சிறந்த வேட்கோவர்-மண்பாண்ட வினைஞருக்கு, கலைஞருக்கு, ‘குயம்’ என்ற பட்டம் தந்து சிறப்பித்தல் மரபு என்றும், பத்தாம் நூற்றாண்டு வரையிலும் இம்மரபு இருந்திருக்கிறதென்றும் தெரியவருகிறது. எனவே, குயம்-குயவர் குயத்தி என்பது கலைஞருக்குரிய ஒரு சிறப்புப் பட்டம் என்றும் கொள்ளலாம்.

அள்ளூர் நன்முல்லையார் என்ற பெண்பாற் புலவரின் பாடல்கள் குறுந்தொகை (9) அகம் (1) புறம் (1) ஆகியவற்றில் காணப்படுகின்றன. ஊரெல்லாம் தலைவனின் பரத்தைமை ஒழுக்கத்தைக் கூறித் தூற்றியபோதும் தலைவி தன் வாயால் அவனைக் குறைகூறமாட்டாளாம்.‘ஊரெல்லாம் உம்மைக் குறை கூறினாலும் நான் தூற்றமாட்டேன்; நீர் அங்கேயே செல்லலாம். உம்மைத் தடுப்பவர் இல்லை’ என்று குமுறலுடன் அவள் சொல்வதாகப் பாடுகிறார்.

தலைவனைக் குறைகூறி வருத்திப் போராடாத இப்பண்பு அவள் கற்பின் திண்மையைக் காட்டுமாம்!

காக்கைபாடினியார் நச்செள்ளையார் குறுந்தொகை 210 ஆம் பாட்டில் காக்கை கரைந்தமையைப் பாராட்டிப் பாடியதால் இப்பெயர் பெற்றார். ‘விருந்தினர் வரும்படி, கரைதலைச் செய்த காக்கை..’ காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இன்றளவும் இருக்கிறது.

சங்ககாலப் பெண்பாற் புலவர்கள் பொதுவாக, மன்னர், வீரர், கொடைத்திறம் ஆகியவற்றையே பாடியிருக்கின்றனர்.