பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உரைநயம் கண்ட உரவோர்

61


கண்ணழித்துப் பொருள்கூறுதல்

‘இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்’ (புறம்134) என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலுக்குப் பழைய உரை:

“இப்பிறப்பின்கட் செய்ததொன்று, மறுபிறப்பிற்கு உதவு மென்று கருதிப் பொருளை விலையாகக்கொடுத்து, அதற்கு அறம் கொள்ளும் வணிகன் ஆய் அலன் அமைந்தோர் பிறரும் போய வழியென்று உலகத்தார் கருத, அந்த நற்செய்கையிலே பட்டது. அவனது கைவண்மை!”

இப்பழைய உரையை உரைவேந்தர், பின்வருமாறு கண்ணழித்துப் பொருள் கூறுகின்றார்:

“இம்மைச் செய்தது-இப்பிறப்பின்கட்செய்ததொன்று; மறுமைக்காம்-மறுபிறப்பிற்குதவும்;எனும்அறவிலை வணிகன் ஆய் அலன்-என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறம் கொள்ளும் வணிகன் ஆய்அல்லன்; சான்றோர் பிறரும் சென்ற நெறி என- அமைந்தோர் பிறரும் போய வழியென்று உலகத்தார் கருத; ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மை-அந்த நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்மை.”

புறநானூற்றைப் படிப்போர்க்கு இஃது எத்துணையளவு பயன் படுகிறது என்பது சொல்லாமலே விளங்கும். இவ்வாறே உரை வேந்தர் எழுதிய பாடலுரைகள் அமைந்துள்ளன.

உள்ளத்து உணர்ச்சிகளைச் சொல்லில்வடித்தல் “செய்யுட் பொருளையுணர்ந்து இன்புறுதற்கு அவ்வச் செய்யுள் பாடப்பெற்ற செவ்வியினை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அதனால் ஒவ்வொரு பாடலின் முன்னுரையிலும் புலவருள்ளத்திலிருந்து அப்பாடல் தோன்று- தற்குரிய சூழ்நிலையினையும், உள்ளத்துணர்ச்சிகளையும் சொல்லோவியமாக இவ்விளக்கவுரையாசிரியர் (உரைவேந்தர்) புனைந்துரைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.