பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரன் அவர்களிடம் ஓடி வந்து, குதித்துக் குதித்துத் தன் வாலை ஆட்டி, சந்தோஷத்தைக் காட்டியது. பிறகு வாத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. வாத்தும் சந்தோஷமாக, ‘குவாக்’, ‘குவாக்' என்று கத்தியது. குழந்தைகளும் அவைகளுடன் சேர்ந்து ஆடிப்பாடிக் குதித்தார்கள்.

சப்தத்தைக் கேட்ட எஜமானர் வெளியே வந்தார். உடனே குழந்தைகள், 'அப்பா, இந்த வாத்தைப் பாரப்பா ! வீரன் கூட்டி வந்திருக்கிறான். இதை நம் வீட்டிலேயே வைத்து வளர்க்கலாமாப்பா!” என்று ஆவலோடு கேட்டார்கள்.

குழந்தைகளுடைய பேச்சைத் தட்டிச் சொல்லும் வழக்கம் அந்த அப்பாவுக்கு எப்போதுமே இருந்ததில்லை. இப்பொழுது மட்டும் வேண்டாம் என்றா சொல்லுவார் ? வாத்து அன்று முதல் அங்கேயே அருமையாக வளர்ந்து வந்தது.

அந்த அப்பா பெயர் என்ன என்று சொல்ல மறந்தே போய்விட்டேன் அவருடைய பெயர் கருணாகர முதலியார். முரளி, சீதா இருவரும் அவருடைய குழந்தைகள், முரளிக்கு வயது பத்து ; சீதாவுக்கு வயது எட்டு. இருவரும் வீரனுடனும் கஸ்தூரியுடனும் (இதுதான் அவர்கள் வாத்துக்கு வைத்த பெயர்) மிகுந்த சந்தோஷமாகக் காலம் கழித்து வந்தார்கள்.

பள்ளிக்கட்டம் விட்டு வந்ததும், வீரனையும், கஸ்தூரியையும் அழைத்துக்கொண்டு தோட்டத்துக்குப் போய்விடுவார்கள். அங்கே எல்லோரும் சேர்ந்து விளையாடுவார்கள்.

8