பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

77


தந்தையின் கையெழுத்துக்குறையை பொருட்படுத்தாமல் தந்தையாரின் நோக்கத்தின்படி நடப்பதே தங்கள் கடமையென்றுணர்ந்து, பதிவாளர் (ரிஜிஸ்டரார்) முன்பு, மரண சாதனத்தை ஒற்றுமையுடன் ஒப்புக்கொண்டு பதிவு செய்து கொண்டார்கள்.

மேற்படி நூல் : பக்கம் - 75

அபிப்பிராயம் - கருத்துகள்

இனி, நான் நேரில் ஒருவாறு தெரிந்து வைத்திருந்த காரியங்களில் அநுமான வகையும் சேர்த்து முற்றுற எழுதி வெளியிட்டிருக்கிற என் கருத்துகள் (அபிப்பிராயம்) சரிதானா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு தலைவரோடு அவ்வக் காரியங்களில் தொடர்புற்றிருந்தோர் இடங்கள் தோறும் சென்று, அவரவர்க்கு உரிய பாகங்களை வாசித்துக் காட்டியபோது அன்னோர் முற்றிலும் சரி என்று ஒப்புக்கொண்டு என்னை மகிழ்வித்தார்கள்.

மேற்படி நூல் : பக்கம் - 4

புத்திக்கூர்மை - அறிவு நுணுக்கம்

பேதை பெதும்பைப் பருவங்களில் அறிமுகமில்லாத அந்தப்புரக் கன்னிகையான ஒரு பெண்ணினுடைய குலநல முதலியவைகளைத் தெரிந்து கொள்ளுதல் எளிதன்று. ஆயினும் குலநலம் உடல் நலம் அழகு படிப்பு பணம் முதலிய காரியங்களை பிறர் பலர் மூலமாய் வெவ்வேறான வழிகளில் முயன்றால் பெரும்பாலும் உண்மை தெரிந்து கொள்ளக்கூடும். ஆனால் வீடடங்கி அந்தப் புரத்திலிருக்கும் கன்னிகையின் குணம் செயல்களையும் அறிவு நுணுக்க (புத்திக்கூர்மை)த்தையும் பற்றி பிறர் மூலமாய்த் தெரிந்து கொள்ளுவது அரிதினும் அரிதேயாம்.

மேற்படி நூல் : பக்கம் 10, 11

சங்கீத ஞானம் - பண்ணறிவு
சாரீரம் - ஒலிநயம்

நமது நண்பருக்கு இயல்பாகவே பண்ணறிவுண்டு. சிறிது கேள்விப் பயிற்சியுமுண்டு. ஆனால் ஒலிநயம் (சாரீரம்) இல்லை. ஆயினும் அவர் பாக்களை வாசிக்கும் போதெல்லாம் சந்தத்தைத் தழுவியே வாசிப்பது பழக்கம்.

மேற்படி நூல் : பக்கம் - 73