பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

29


கற்பனை பண்ணியவனே, ஞானத்தின் சக்தியாக வேலையும் நினைத்திருக்கிறான். குமரன் வேலன் ஆன கதையும் இப்படித்தான்.

முருகனாகிய குமரன் மூலமாக இறையைக் கண்ட தமிழன், மலைமகள் மகனாகக் கண்ட மாயோன் மருகனை, முதலிலே மலை மேலேயே ஏற்றிவிட்டிருக்கிறான். தமிழகத்தில் மலையும், மலை சார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்தையும் அவன் இருப்பிடமாகக் கருதியிருக்கிறான். குன்றுதோறாடும் குமரனே என்றாலும், நெய்தல் நிலமான அலைவாய்க்கரை, முல்லை நிலமான ஆவினன் குடியிலும், மருத நிலமான பழமுதிர் சோலையிலும், அவனுக்கு இருப்பிடம் அமைத்து அவற்றை அவன்றன் படை வீடுகள் எனப் பாராட்டி இருக்கிறான். இப்படி மலையிலே பிறந்து, கடற்கரையிலும், வயல்வெளியிலும், பழத்தோப்பிலும் தவழ்ந்தவனே, நதிக்கரையிலே நன்றாக வளர்ந்து ஏரகம் என்னும் செய்குன்றின் மீதும் ஏறி நின்று மக்களை வாழ்வித்திருக்கிறான். இந்த ஆறு நிலையையும் தான் அந்தப் பழைய புலவன் நக்கீரன் பாட்டாக பாடி இருக்கிறான். அந்த இறைவனிடம் செல்ல விரும்புபவர்களை எல்லாம் ஆற்றுப் படுத்தியிருக்கிறான். ஆம். நல்ல வழிகாட்டியாகவே அமைந்திருக்கிறான்.