பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

65


அநாயசமாக எடுத்து இழுத்து முறித்தானே! ஏழு மராமரத்தையும் ஒரே அம்பில் துளைத்தானே! அது எல்லாம் அவன்றன் ஆற்றலைத் தானே விளக்குகிறது. என்றாலும் இந்த ஆற்றல் எல்லாம் புகழுடையதாக அமைய சீதையின் கற்பு அல்லவா துணை நின்றிருக்கிறது. கற்பெனும் கனலால் அல்லவா இராவணன் வெந்திருக்கிறான்; சீதையென்னும் அமிழ்தால் செய்த நஞ்சல்லவா இராவணனைக் கொன்றிருக்கிறது. ஆதலால் கம்பன் கண்ட ராமனிடம் ஆற்றல்தான் சிறந்திருந்தது என்று கூறவும் வகை இல்லையே.

ஆனால், ராமனது அழகை நினைத்தால், கம்பன் அப்படியே விம்மிப் பெருமிதம் கொண்டுவிடுகிறானே. ஓவியத்தெழுத ஒண்ணா உருவத்தனான ராமனை, ஆடவர் பெண்மையை அவாவும் தோள்கள் உடையவன் என்றன்றோ கூறுகின்றான். ராமனது புயவலியைக் கூற முற்படுகிறபோதும் அலை உருவக்கடல் உருவத்து ஆண்தகை என்றல்லவா குறிப்பிடுகிறான். ஏன்? உருவெளித் தோற்றத்தில் வல்வில் ஏந்திய ராமனைக் காணும் சூர்ப்பனகை கூட அவனது செந்தாமரைக் கண்ணிலும், செங்கனி வாயிலும், சந்தார் தடந்தோளிலும், அஞ்சனக் குன்றமன்ன அவன் வடிவிலும் தானே ஈடுபடுகிறாள். நிரம்பச் சொல்வானேன்


மையோ, மரகதமோ, மறிகடலே
மழைமுகிலோ
ஐயோ! இவன் வடிவு என்பதோர்
அழியா அழகு உடையான்

என்றுதானே கம்பன் அப்படியே ராமனது அழகைக் கண்டு பரவசம் அடைகிறான். ஆதலால் கம்பன் கண்ட ராமனில் சிறப்பாயிருப்பது அவனது அழகே என்று கூறி முடித்தேன். கூட்டத்திற்கு வந்திருந்த அறிஞர் அத்தனை பேருமே ஆமோதித்தனர் அந்தத் தீர்ப்பை. இது கம்பனது வெற்றியல்ல. ராமனது வெற்றியல்ல, அழகின் வெற்றிதான் இது. இந்நில உலகிலே அழகு தருகின்ற வெற்றியை, அறிவோ, ஆற்றலோ தருவதில்லை என்பதற்கு இதை விடச் சிறந்த ஆதாரம் வேண்டுவதில்லை அல்லவா?

இந்த அழகின் வெற்றியை இன்னும் அனுபவிக்க வேண்டுமானால் நாம் தேடிச் செல்ல வேண்டுவது, முருகனாம்