பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

41



கோவணாண்டியாகவே நிற்கின்றனர். கையில் தண்டு ஒன்றை மட்டும் ஏந்திக் கொண்டு, மற்றைய உடமைகளை எல்லாம் துறந்து விடுகிறார்கள், சின்னஞ்சிறு பிள்ளையாக இருக்கும்போதே, ஏன் இப்படி இந்த இரண்டு மூர்த்திகள் மட்டும் முற்றும் துறந்த முனிவர்களாக இருக்கிறார்கள் இந்த இளவயதிலேயே' என்று கேட்டேன் பலரிடம். இந்தக் கேள்விக்கு விடை தேடிப் புரட்டினேன், பல புத்தகங்களை. விடை கிடைப்பதாக இல்லை. விளையாட்டாகச் சொன்னார் ஒரு பக்தர் ‘ஒரு மனைவியே சற்ற ஏறுமாறாய் இருந்தால் சந்நியாசம் கொள்ள வேண்டியதுதானே; ஒன்றுக்கு இரண்டு மனைவியர் என்றால் ஒருவரிடமும் கூறாமல் சந்நியாசம் ஆவதைத் தவிர வேறு வழி என்ன? என்று’. ஆனால் இந்த மனைவியரை அடையுமுன்பே அல்லவா, மணம் ஆகா அந்த இளவயதிலேயே அல்லவா முருகன் பாலசந்நியாசி ஆகிவிடுகிறான்.

தமிழ்நாட்டு அறிஞன், அந்தப் பொய்யில் புலவன் வள்ளுவன் சொன்னான். இவ்வுலகில் இருக்கும் துன்பங்களில் இருந்தெல்லாம் விடுபட வேண்டுமானால் இவ்வுலகத்தில் நாம் உடமை என்று கருதுகின்ற பொருள்களில் உள்ள ஆசையை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி ஆசையை விட விடத்தான் பெற வேண்டிய பேறுகளை எல்லாம் பெறலாம் என்று.


வேண்டின் உண்டாகத் துறக்க, துறந்தபின்
ஈண்டு இயற்பால பல

என்பது தானே அவன் சொன்ன அருமையான குறள். உண்மைதானே, உலக மக்களுக்கு எல்லா நன்மைகளையும் பேறுகளையும் அளிக்க விரும்பும் நாயகன், அந்த உலகத்து உடமைகளிலேயே, பேறுகளிலேயே தானும் ஆசை வைத்து அதில் திளைத்து நின்றால் எப்படிப் பக்தர்களுக்கு அருள் செய்ய இயலும். ஆதலால் அவன் உடமைகளை எல்லாம் துறக்கிறான், மக்களுக்கு அவர்கள் வேண்டிய பேறுகளை எல்லாம் அளிப்பதற்காகவே. அவன் முற்றும் துறந்த கோவணாண்டியாக நிற்பதினாலே தான், நாம் பெறற்கரிய பேறுகளை எல்லாம் பெறமுடிகிறது. அவன் துறவியானது நம்மையெல்லாம் துறவிகளாக்க அல்ல. ஆக்கம் உடையவர்களாக, அருள் உடையவர்களாக மக்கள் வாழ்வதற்காகவே ஆண்டவன்