பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

இந்திய சமுதாய... /துணை இழப்பும் துறவறமும்


பொருள்? வி-தவா நாயகன் இல்லாதவள் காப்பாளன் இல்லாதவள் என்று கொள்ளலாம். அந்தக் காப்பாளன், அவளுடைய கணவனாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அவன் சோதரனாக இருக்கலாம்; தந்தையாகவும் இருக்கலாம்; யாராகவும் இருக்கலாமே? ‘விதவை’ என்ற சொல்லுக்கு, வேதப்பாடல்களில் குறிக்கப்படும் பொருள் திட்டவட்டமாகச் சொல்லும்படி இல்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. வேதப் பாடல்கள், உலகின் இயற்கைத் தோற்றங்கள், கோள்களின் இயக்கங்கள், உயிர்நிலைகளை அடிப்படையாக்கி, மானிட வாழ்வின் கூறுகளால் உருவகப்படுத்தப்பட்டவை, உயர்ந்த தத்துவங்களை உணர்த்துபவை என்று சொல்லப்படுகின்றன.

என்றாலும், இந்த அடிப்படையிலும், மானிட சமுதாய வாழ்வு நிலைகளைப் புரிந்து கொள்ள இவை உதவுகின்றன. ருக்வேதம் நான்காம் மண்டலத்தில் (IV-2-8) ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்திரனின் தாய் அதிதியின் கூற்றாக, இந்திரனைப் புகழும் பாடல் இது.

‘உன் தாயை விதவையாக்கியவர் யார்? உன்னைவிட ஆற்றலுடைய தேவன் உண்டோ? தந்தையைக் காலைவாரிக் கொன்ற ஆற்றுலுடையவன் அன்றோ?’ என்ற பொருள்பட, ஒரு தாய்த்தெய்வம் மகனைப் புகழ்ந்துரைக்கிறது. இதில் ‘உன் தந்தை’ என்ற குறிப்பு இல்லை. பொதுவாகத் தந்தை என்றே குறிக்கப்பெறுகிறது. இப்போது அது முக்கிய மில்லை. விதவையாக்கியதற்காக இந்திரன் போற்றப்படுகிறான். இது தான் நம்மைக் கவரும் முக்கியமான செய்தி. எனவே, ஆதிகாலத்தில், பெண்ணின் நிலை, புறச் சின்னங்களாலும், ஒடுக்கும் நெறிகளாலும் கட்டுப் படுத்தப்பட்டதாக இருக்கவில்லை என்பதும், அப்போது பயன்படுத்தப்பட்ட சில சொற்களே, பல புதிய பரிமாணங்களைப் பெற்று, இவளை ஒடுக்கும் நெறிக்கான முக்கியக் கருவிகளாயின என்று கொள்ளலாம்.