பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

59


தவம் செய்தால், உடனே அவர் தவத்தைக் கலைத்து வர அப்பொது மகளுக்கு ஆணையிடப்படுகிறது. தவத்தைக் கலைக்க, ஆன்மீக ஏற்றத்தில் இருந்து கொக்கிப் பிடி போட்டு இழுக்க அவள் கலைத்திறன், உடல் இரண்டு பயன்படுத்தப்படும். உடலைக் கொடுத்தால் விளைவு பிள்ளைப் பேறுதான்.

ஆனால் தாயுரிமை உண்டா?

‘எனக்கிட்ட பணியை நிறைவேற்றி விட்டேன். இந்தாரும் குழந்தை’ என்று மகவைக் கையிலேந்தி அதைத் தேவேந்திரனிடம் சமர்ப்பிக்க முடியுமா? அதன் தந்தையிடமே நீட்டினாள் மேனகை

‘உன்னால்தான் தவம் போயிற்று! உன்னால் வந்த விளைவு! நீயே வைத்துக் கொள்’ என்று மறுத்துவிட்டுப் போகிறார் ‘பிராம்மண’ மதிப்புக்காகத் தவமியற்றிய அந்த க்ஷத்திரியர்.

இவளால் குழந்தையுடன் ஆண்டையிடம் போக முடியாது.

குழந்தை அநாதையாகிறது.

அன்றிலிருந்து இன்று வரையிலும் திருமண முத்திரையில்லத பெற்றோரின் வாரிசுகள் அநாதைகளே.

பெண் உடல் வாணிபத்துக்குத் தெய்வீக மதிப்பளித்த வருண சமுதாயம், அதை மையமாகக் கொண்டு எத்தனை மரபுகளை வளர்த்தன! அந்த வகையில் ஈசனுக்கு என்று பொட்டுக் கட்டிக் கொண்ட மரபினர், ஒருவனுக்கு ஒருத்தியாக இருக்கலாகாது என்பதும் ஒரு கண்டிப்பான விதியாக இருந்தது. இந்த வருக்கத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால் உடல் வாணிபத்துக்கு வாரிசாகும். ஆண் மதிப்பற்றுப் போவான். தன் மதிப்பைத் தேடிக் கொள்ள அவன் அந்தக் குடும்ப நிழலை விட்டே செல்ல வேண்டும்.