பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

121


பள்ளியில் இருந்த நேரத்திலெல்லாம், இரவின் தனிமையும் மனைவியின் உறவுமே இவன் எண்ணங்களில் தோன்றி எரித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நாட்களில் இந்த அலைக்கழிப்பு, தனக்கு அகால மரணத்தைக் கொண்டு வந்து விடுமோ என்று கூட அவனை அச்சுறுத்தியது. அந்தந்த நேரத்துக்குரிய கடமைகளை ஆற்ற வேண்டும் என்ற ஒழுக்க உணர்வு இத்துன்பத்திலிருந்து அவனைக் காப்பாற்றியது. மூன்றாண்டு காலம் இந்தப் பிள்ளைப் பருவ இல்லறம் கழித்து பதினாறாவது வயதில் கஸ்தூரி கருவுற்றாள். அப்போதும் மோகனின் வேட்கை குறைந்து விட வில்லை. உடல் நோயால் துன்புற்ற தந்தைக்கு இரவு கால் பிடித்துத் தொண்டு செய்யும் கடமை இருந்தது. அந்தப் பணியைச் செய்யும் போதெல்லாம், எப்போது முடிந்து படுக்கையறை செல்லலாம் என்ற நினைப்பே மேலோங்கியது.

அன்று சிறிய தந்தை ஊரிலிருந்து நோய் வாய்ப் பட்டிருந்த தமையனைப் பார்க்க வந்திருந்தார். மோகனிடம் அவனைப் படுக்கைக்குச் செல்லச் சொல்லி அந்தப் பணியைத் தாமே செய்ய அமர்ந்தார்.

அப்போது கஸ்தூரி உறங்கிப் போயிருந்தார், கர்ப்பிணியான அவளைப் பூப்போல் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவு அவனிடம் இல்லாமலில்லை. என்றாலும் மனம், தடுக்க வேண்டிய மோக வெறியில் கிளர்ந்திருந்தது. அவளை உறக்கம் கலைய எழுப்பினான். அப்போது அறைக் கதவு இடிபட்டது. தந்தை இறந்த செய்தி அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதை வாழ்க்கையில், தம்மைக் கூசிக் குறுகச் செய்த சம்பவமாக காந்தியடிகள் விவரித்துள்ளார். இளம்பருவத் திருமணத்தின் கேடுகளை அவர் இச்சம்பவத்தின் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

அந்தக் குழந்தை முழுதாகப் பிறந்து உயிர்தரிக்க வில்லை. அது காலத்தினால் விளைந்த பிண்டம் என்று அவர் கருதினார்.