பக்கம்:இந்தியப் பெருங்கடல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

களில். 5 பங்கு அளவுக்கு நிக்கல், கொபால்ட் முதலிய உலோகங்கள் உள்ளன.

இந்தியக் கடலின் இயைபை ஆராய்ந்ததிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாவது : இந்தியக் கடலிலுள்ள மீன்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் போதுமான ஆக்சிஜன் என்னும் உயிர்க் காற்று பெருமளவுக்கு உள்ளது. விலக்குகள் அரபிக்கடலும், வங்காள விரிகுடாவும் ஆகும். இங்குச் சில இடங்களில் ஆக்சிஜன் காணப்படவில்லை. இங்கு நீர் போதுமான அளவுக்குச் செங்குத்தாக ஓடாததே ஆக்சிஜன் இல்லாமைக்குக் காரணமாகும். இவ்விடங்களில், உயிர்களுக்கு ஊறுதரும் அய்டிரஜன் சல்பைடு என்னும் வாயு அதிகமாகக் காணப்படுகிறது.

பொதுவாகக் கடல் நூல் துறையில் வல்லுநர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறார்கள். அதை ஒருவாறு ஈடு செய்ய, திறமைமிக்க மாணவர்களை ஈர்க்கும் பொருட்டு, இத்திட்டம் பெருமளவில் செயற்படுத்தப்படுகிறது. அன்றியும், கடல் நூல் துறையில் பயில்வோருக்கு நிறைந்த அறிவும் போதிய பயிற்சியும் கிடைக்க இதனால் ஏதுவாகும்.

இந்த ஆராய்ச்சியினால் திரட்டப்படும் பல துறைச் செய்திகள் வகைப்படுத்தப்படும்; கண்டுபிடிப்புக்கள் தொகுக்கப்படும். இவை எல்லாம் இறுதியாக ஒரு நிலையான நூல் வாயிலாக வெளியிடப்படும். இந்நூல் சிறப்பாகக் கடல் நூலில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெரிதும் பயன்படும்.