பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

மக்களுடைய உள்ளத்திலும் உதித்துவிட்டால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட ஒரு உணர்ச்சியை உருவாக்கத்தானே நமது அருங்கலைகள் பெரிதும் உதவியிருக்கின்றன. கவிதை, இசை, சித்திரம், சிற்பம், நடனம், நாட்டியம் முதலிய கலைகளில் எல்லாம் ஊடுருவி நிற்கும் இந்த ஒற்றுமை, உறவு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்றெல்லாம் எண்ணினேன். அன்று அந்தப் பெண்கள் கல்லூரியில் அந்தப் பெண்கள் நடித்த காட்சியைப் பார்த்த போது.

நமது இந்திய நாட்டின் தென் பகுதியான தக்ஷிணத்திற்கும் வட இந்தியாவிற்கும் இடையில் குறுக்கே கிடக்கிறது விந்திய மலையும் நர்மதை நதியும். என்றாலும் இந்த ஆற்றலையும், மலையை யும் தாண்டித்தான் வட இந்தியர் தென்னாட்டோடும், தென்னிந்தியர் வட நாட்டோடும் உறவு கொண்டாடி வருகிறார்கள். கைலையில் வாழும் அந்தச் சிவபெருமானே அகத்தியரைத் தென்னாட்டிற்கு அனுப்பி இந்த உறவுக்கு அடிகோலி இருக்கிறான். பழந்தமிழ் நாட்டுப் பெருவேந்தர்களும் இந்த உறவை வளர்த்து வந்திருக்கிறார்கள். சோழன் கரிகாலன் இமயத்தில் புலிக் கொடியைப் பொறித்தான் என்றால், சேரன் செங்குட்டுவன் அங்கிருந்தே கல் கொண்டு வந்து பத்தினித் தெய்வம் கண்ணகியைப் பிரதிஷ்டை செய்திருக்கிறான்.

சிற்பத்திற்குப் பெயர் பெற்ற நாடு நம் நாடு. சித்திரத்தில் மிக உயர்ந்த சிற்பநூலின் அற்புதத்தை சின்னச் சின்ன ஊரில் கூட இன்று எங்குங்காணலாம். இந்தச் சிற்பக் கலை மூலமாக நாட்டின் கலையுறவு

82