பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

27



உலகளாவி நின்ற புகழ்

வில்லியம் ஹார்வியின் புகழ், இங்கிலாந்து நாட்டில் மட்டுமன்று, பிரிட்டிஷ் ஆட்சி எங்கெங்கு நடைபெற்றதோ அங்கங்கே எல்லாம், ஹார்வி புகழ்க் கொடி மருத்துவத் துறையில் பறந்தது.

மருத்துவ உலகின் பேரறிஞர்கள் அனைவரும்; அந்தந்த நாட்டில் அவரது அரிய கண்டுபிடிப்புகளை வரவேற்றுப் பாராட்டிப் போற்றி வாழ்த்திக் கொண்டே இருந்தார்கள்.

பெரும் பணக்காரர்களும், சீமான்களும் - கோமான்களைப் போல அக்காலத்தில், கோச்சு வண்டியிலேதான் எங்கும் செல்வார்கள். அல்லது குதிரை சவாரியிலும் போவார்கள்.

இங்கிலாந்து நாட்டின் அரசியல்வாதிகள், பணம் படைத்த பிரபுகள், புகழ்பெற்ற அறிஞர் குடும்பங்கள், சமுதாயத்தால் மதிக்கப்படும் சான்றோர்கள், லார்டுகள், சான்சலர்கள், சர். பிரான்சிஸ் பேகன் போன்ற புகழ் பெற்ற சமுதாய ஆன்றோர்கள் ஆகியவர்கள் எல்லாருமே; வில்லியம் ஹார்வி திறமையான ஒரு மருத்துவர் என்பதோடு, அவர் ஒரு கைராசி பெற்ற மருத்துவர் என்ற மரியாதையுடன் எந்த நோய் வந்தாலும் அவரிடமே சிகிச்சைப் பெற்று வரும் வாடிக்கையாளர்களாகவும் இருந்தார்கள். பொதுமக்கள் மட்டுமல்ல; அரண்மனையாளர்களும், குறிப்பாக முதலாம் ஜேம்ஸ் மன்னர் - முதலாம் சார்லஸ் உட்பட்ட அனைவரும்; ஹார்வியிடமே மருத்துவ சிகிச்சை பெறும் வாடிக்கையாளர்களாவார்கள். இந்த நிலையில் ஹார்வி செல்வாக்கும் செல்வமும், சொல்வாக்கும் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போருக்குப் புரியும்.

குதிரைகளில் ஏறி மருத்துவச் சிகிச்சைக்குச் செல்வார் ஹார்வி. அவர் பின்னால் சில ஆரம்ப மருத்துவர்களாலும், மருந்து கலப்பவர்களும், எடுபிடி வேலை செய்ய ஆண் செவிலியர்களும் வண்டிகளில், பரி சவாரிகளில் செல்வது வழக்கமாக இருந்து வந்தது.