பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

கலை என்பது மக்கள் உள்ளத்தின் அரிய கண்டுபிடிப்பு. உணர்ச்சிகளின் நுண்ணுருவம். இசை, ஓவியம், சிற்பம், ஆடல், இலக்கியம் ஆகிய யாவும் நுண்கலைகள். கட்டடக் கலையும் இவற்றேடு ஒப்பவைத்துப் போற்றத் தக்க சிறப்பினை உடையது. இக்கலைகள் யாவும், ஒரு நாட்டின் நாகரிக வளர்ச்சிக் கேற்பத் தாமும் வளர்ந்து சிறப்புறுகின்றன. இக்கட்டடக்கலை நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் வேறுபட்டுக் காணப்படுகிறது. ஒவ்வோரினத்தாரும் தங்களுக்கெனத் தனித்தன்மை பெற்ற ஒவ்வொரு கட்டடக் கலையை வளர்த்து வந்திருக்கின்றனர். அக்கலையார்வத்தின் காரணமாக உலகம் போற்றும் உயரிய கலைக் கோவில்கள் பல உருப்பெற்றன. அவைகள் காலத்தை வென்று தத்தம் கலைச் சிறப்பைப் பறை சாற்றிய வண்ணம் இன்றும் செம்மாந்து நிற்கின்றன. அவற்றுள் ஒரு சில கட்டடங்களைப் பற்றியும், அவை தோன்றிய கதைகள் பற்றியும், இந்நூலில் சுவைபட எடுத்துக் கூறியிருக்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டில் கட்டடக் கலை அடைந்துள்ள வியக்கத்தக்க வளர்ச்சியைப் பற்றிப் பல அரிய கருத்துக்களை எடுத்துக் கூறி, இந்நூல் சிறப்புற அமைவதற்குப் பெரிதும் துணை புரிந்தவர், எனது கெழுதகை நண்பரான திரு “K. L. அண்ணாசாமி B.E அவர்கள். அன்னாருக்கும், இந்நூல் சிறந்த முறையில் அச்சேற உடனிருந்து பணியாற்றிய புலவர் பு. செல்வராசனர் அவர்கட்கும், இந்நூலை வெளியிட்ட சிவலிங்க நூற்பதிப்புக் கழகத்தார்க்கும் என் உளங் கலந்த நன்றி.

கவிதைப் பண்ணை
10-10-63
இங்ஙனம்
முருகு சுந்தரம்.