பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கின்றன. இம்மகளிர் அனைவரும் பூவேலை செய்த கரைகளையுடைய ஆடைகளும், முத்து மாலைகளும், பலவித அணிகளும் பூண்டுள்ளனர். இவர்களுக்கு எதிரில் அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்து எழிலோடு அமர்ந்திருக்கும் இரு பெண்களின் உருவமும், அடியில் மூன்று பெண்களின் தலைகளும் காணப்படுகின்றன. இந்த ஒவியங்களுக்கு அடுத்தாற்போல், கூட்டமாக அமர்ந்துள்ள இருபது பெண்கள் சிறு அளவில் வரையப்பட்டுள்ளனர்.

வடக்குப்புறச் சுவரில் சிவபெருமான் முப்புரத்தை எரித்த காட்சி எழுதப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தேவர்களும், மற்றொரு புறம் அசுரர்களும், நடுவில் உயர்ந்த தேரில் சிவனும் வரையப்பட்டுள்ளனர். சிவபெருமானின் எட்டுக் கைகளில் எட்டுவிதப் படைகள் திகழ்கின்றன. அவருடைய புருவங்கள் வில்லைப்போல் வளைந்திருக்கின்றன. மூன்றாவது கண் பிதுங்கிக் கொண்டிருக்கிறது. மூக்குத் தொளைகள் அகன்று திறந்துள்ளன. தலையின் நிலை போருக்கு அறைகூவும் பாவனையில் அமைந்துள்ளது. முகத்தில் சினக்குறி இல்லாவிடினும், பெருமிதமும், வீரமும், ஆற்றலும் பொலிகின்றன. உதடுகளிலும் கண்களிலும் ஒருவித ஏளனச் சிரிப்புத் தவழ்கின்றது. இந்த ஓவியம் இடைக்கால ஓவியக்கலையின் சிகரம் என்று சொல்லலாம்.

இச்சுவரில் காணும் அரக்கரும், அரக்கப் பெண்டிரும் அழகாகவே தீட்டப் பட்டுள்ளனர்.