பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106


விட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியர்களாலும், இசுலாமியர்களாலும் பேணி வளர்க்கப்பட்ட கட்டடக் கலை, இன்று காட்சிக்கும் பாராட்டுதலுக்கும் உரிய பழங்கலையாக மாறிவிட்டது. பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்ட சிற்பக் கலையழகோடு கூடிய கட்டடங்கள் இன்று கட்டப்படுவதில்லை. சிற்பக்கலையும் இன்று வலிமை குன்றி நசித்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஓவியக் கலையை எண்ணும்போது நமக்குப் பெருங் குழப்பமும் வியப்பும் ஏற்படுகின்றன. இன்றைய கலைப் பிரியர்கள் ஓவியனின் ஆற்றலுக்கு முதலிடம் அளிக்கின்றார்களே ஒழிய, எழுதப்படும் கலை இயற்கையை ஒட்டியதாக அமைந்திருக்க வேண்டும். என்று கருதுவதில்லை. இன்றைய மறுமலர்ச்சி' ஓவியர்களின் புகைப்படங்களும், அவர்களைப் பற்றிய அறிமுகக் கட்டுரைகளும், அவர்கள் தீட்டிய ஓவியங்களும் செய்தித் தாள்களில் அடிக்கடி வெளிவருகின்றன. அவ்வோவியங்கள் யாவும் மேலும் கீழும், குறுக்கும் நெடுக்குமாக உள்ள பல நேர் கோடுகளாகவும், வளைவுக் கோடுகளாகவுமே காணப்படுகின்றன. உடைந்துபோன வண்ணக். கண்ணாடிப் பலகைபோல் அவைகள் காட்சியளிக்கின்றன. தெளிவான உருவம் எதையும் அவற்றில் காண முடியாது. ஆனால் அவற்றை உயர்ந்த, ஓவியங்கள் என்று உலக மக்கள் பாராட்டுகின்றனர்; பரிசு வழங்குகின்றனர். இன்றைய மக்களின் கலைச்சுவை அவ்வாறு மாறிவிட்டது.

சென்ற நூற்றாண்டு வரை இந்திய நாட்டில் ஒருநோக்குக் கட்டடங்களே (Symmetrical buildings)