பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகு சந்தரம் -2) ஒடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர் உதையப்ப ராகிவிட்டால் ஒர்நொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ என்று தமிழ்நாட்டு நிலப்பிரபுக்களுக்கும் செல்வர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். பொதுவுடைமைக் கருத்துக்களைத் தமிழ் இலக்கிய வாகனத்தில் முதன்முதலில் ஏற்றிய பெருமை பாரதிதாசனையே சாரும். நக்கீரனுக்கு அடுத்தாற்போல் தமிழ்க் கவிதை வரலாற்றில் அஞ்சாமை மிக்க கவிஞர் பாரதிதாசன்தான். எவர்பேரால் ஆனாலும் உயர்ந்த தென்னும் எதன்பேரால் ஆனாலும், ஏய்த்து வாழ்தல் தவறேதான் அவ்வாறு வாழ்ப வர்க்குத் தடியடிதான் தமிழடிதான் என்று பாடியதோடு, செயலிலும் காட்டும் துணிச்சல் அவருக்கு இருந்தது. இந்நாட்டின் மூடத்தனத்தையும், அறியாமையையும் “ஊதையினில் துரும்புபோல் அலைக்கழித்தார். மாத்தமிழ் வல்ல மகாமகோபாத்தியாயர்களும், பண்டித மணிகளும், தமிழகத்திலும் புதுவையிலும் வாழ்ந்த அதிரடி அரசியல் தலைவர்களும் இவர் கவிதைச் சாட்டை வீச்சிலிருந்து தப்ப முடியவில்லை. கருத்து வேறுபாடுகள் வந்தபோது தம்மை வளர்த்துவிட்ட பெரியாரையும், அண்ணாவையும்கூட அவர் தாக்கத் தவறவில்லை. ஆனால் எதையும் தாங்கும் இதயம் பெற்ற அண்ணா, அவற்றைப் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கியும், கடற்கரைச் சாலையில் சிலை வைத்தும் பாராட்டினார். துற்றற்குரியவர்களைத் துாசியெனத் துற்றிய பாரதிதாசன், போற்றற்குரியவர்களை உளமாரப் போற்றினார்.