பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் திருச்சியில் அப்போது சிறப்பான ஓர் இலக்கிய வட்டம் இருந்தது. ஞானபீடப் பரிசு பெற்ற நாவலாசிரியர் அகிலன் அங்கு இரயில்வே அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த இலக்கிய வட்டத்தில் குறிப்பிடத்தக்கவர்கள் புலவர் கீரன், திருலோக சீதாராம், கவிஞர் கலைவாணன், ஏ. எஸ். இராகவன், திருச்சி பாரதன் ஆகியோர். இவ்வட்டத்தின் தலைமைப்பீடம் கவிஞர் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியாரின் அச்சகம். அவர்தான் இவ்வட்டத்தின் புரவலர். மடிப்புக் கலையாத கதராடையும், நெற்றியில் பளிச்சென்ற திருநீற்றுப் பூச்சும், கனத்த சரீரமும், கனிந்த சாரீரமும், வெள்ளி வெற்றிலைப்பெட்டியும் ரெட்டியாரின் "டிரேட்மார்க்'. அவருக்குப் பச்சை மலையில் எஸ்டேட் உண்டு. அங்கு ஒரு பள்ளியும் நடத்தி வந்தார். எந்த இலக்கியவாதி அவரச்சகத்தைத் தேடிச் சென்றாலும், கட்டாயம் நல்ல ஒரு காப்பி கிடைக்கும். திருச்சி இலக்கியவட்டம் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், பெங்களுர், பம்பாய், தில்லி, கல்கத்தா தமிழ்ச் சங்கங்களுக்கும் சென்று இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. மக்கள் எதிரில் நடத்தும் திருச்சி வானொலிக் கவியரங்கில், தவறாமல் முன் வரிசையில் அமர்ந்து தலையாட்டி சபாஷ் போடத் தவறாது இந்த இலக்கிய வட்டம். "திருலோகம்’ என்று எல்லாராலும் அன்போடு அழைக்கப்படும் சீதாராம் திருச்சி இலக்கிய வட்டத்தின் செல்லப்பிள்ளை. ஆன்மீகமும் இலக்கியமும் கலந்த கனிந்த பழத்தோற்றம். இவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும் பார்ப்பன பந்தா இல்லாமல் எல்லாரிடத்திலும் சரளமாகப் பேசிப் பழகுவார். -