பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

31


இவ்வாறு தொலை நோக்கிக் கருவிகளை படிப்படியாக ஓர் உருவத்தைப் பெரியதாக்கிக் காட்டிடும் வகைகளை அதிகப்படுத்தி, பார்க்கும் குழாய் வரலாற்றிலே பல புதுமைகளைச் சென்று ஒரு புரட்சியையே தோற்றுவித்தார் கலீலியோ என்றால் மிகையல்ல;

அவர் கண்டு பிடித்தக் கருவிகள் வாயிலாக, படிப்படியாக பெரிய பெரிய உருவங்களில் முழு சந்திர மண்டலத்தையும் ஆராய்ச்சி செய்து வந்தார்.

அந்த ஆராய்ச்சியின் பயன்கள், பிற்கால உலக ஆய்வாளர்களுக்கு பல அரும்பெரும் உண்மைகளை உணர்த்தும் கருவிகளாகவே அவை அமைந்தன.

சந்திர மண்டல ஆராய்ச்சியிலே கலீலியோ ஈடுபட்ட போது, அங்கே பற்பல மலைவரிசைகள் இருப்பதையும், அவைகட்கு அருகே பெரும் பெரும் பள்ளத்தாக்குகள் உள்ளதையும் பார்த்துப் பிரமித்துப் போனார்.

சூனியமான வெளித்தோற்றங்கள் அவரது ஆய்வுக் கண்களுக்குப் புலப்பட்டன. மனிதக் கண்கள் அதுவரைக் கண்டிராத அதிசயங்களை அவரது விழிகள் பார்த்துப் பார்த்து வியந்தன!

தாம் ஒருவர் மட்டும் அவற்றைக் கண்டுகளிப்படைந்தால் போதுமா? மற்ற மக்களும் அந்த அதிசயங்களைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டாமா? என்று எண்ணி; அதற்கான வழிகள் என்ன என்பதைப் பற்றிச் சிந்தித்தார்.

நீலவான ஆராய்ச்சியிலே நீந்திக் கொண்டிருந்த கலீலியோ. மற்ற ஆராய்ச்சியாளர்களும் அவற்றைப் பார்ப்பதற்கான அற்புதக் கருவிகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கினார்.

க பா- 3