பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

இறைவன் புறப்படும் காட்சி பெரிய அளவில் அழகாக உருவாகி இருக்கிறது. சிவபாத சேகரனான ராஜராஜன் கலை மூலம் பக்தியை வளர்க்கலாம் என்று கண்டவன். அதற்காக பெரிய கோயிலைக் கட்டியிருக்கிறான். பெரிய பெரிய சிலை உருவங்களை நிர்மாணித்திருக்கிறான், பெரிய சித்திரங்களையும் தீட்டியிருக்கிறான். சோழர்களுக்குப் பின் நாயக்க மன்னர்களும் மதுரை மீனாக்ஷியம்மன் கோயில் முதலிய இடங்களில் சித்திரங்களைத் தீட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால், இவை எல்லாம் சிறந்தவை என்று கூற இயலாது.

இன்று தமிழ்நாட்டில் ஒரு புதிய உணர்ச்சி பிறந்திருக்கிறது. அதன் மூலமாகச் சித்திரம் தீட்டுபவர்கள் பலர் தோன்றியிருக்கிறார்கள். வண்ண ஓவியங்கள் வரைபடமாகத் திரைச் சீலையில் எல்லாம் எழுதப்படுகின்றன. சமீப காலத்தில் கேரளத்தில் ரவிவர்மாவும் வங்காளத்தில் அவனீந்திரரும் வளர்த்த இந்தக் கலையை இன்று தமிழ்நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் வளர்த்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தருவார் தொகையும் பெருகி வருகிறது. சித்திரம், சிற்பம் முதலிய கலை வளர்ப்பதன் மூலமாக தமிழர்களது கலை ஆர்வத்தை வளர்க்கலாம், வாழ்வின் தரத்தையே உயர்த்தலாம் என்பது என் நம்பிக்கை. அதற்கு ஆவன செய்ய வேண்டியது தமிழர் கடமை.

78