பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

உயர்ந்தவை. ஹலபேடைப் போலவே இந்தக் கோயில் வெளிச் சுவரில் வரிசை வரிசையாய், பட்டை பட்டையாய் சிற்ப வடிவங்கள் பல செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வடிவங்களில் சிறப்பானவை மேல் வரிசையில் உள்ள ‘மதனிகை’ வடிவங்களே. கிட்டத்தட்ட நாற்பது பெண்கள் அங்கே உருவாகியிருக்கின்றனர். இவர்களில் ஒரு சிலரே தெய்வ மகளிர், மற்றவர்கள் எல்லாம் சாதாரணப் பெண்களே. எல்லோருமே நல்ல அழகிகள். எல்லோருமே ஏதோ. நடனம் ஆடப் புறப்பட்டவர்கள் போலவே பல ‘போஸ்’களில் - நிற்கிறார்கள். பொட்டிடும் நங்கை, கிளியேந்திய பெண், கொடியடியில் நுடங்கும் மடக்கொடி, காதலன் வரவை எதிர்நோக்கி நிற்கும் காரிகை, ஆடையில் தேள் ஒன்றிருக்கிறது என்று அறிந்து அந்த ஆடையை உதறிவிட்டு நிற்கும் மங்கை - இப்படி எண்ணற்ற பெண்கள் உயிரோவியங்களாக அங்கே நிற்கின்றனர். எல்லா வடிவங்களிலுமே சிற்றுளியின் நயம் தெரியும். நுணுக்க வேலைப் பாடுகளோடு கூடிய வடிவங்களாக அவை அமைந்துள்ளன. ஆதலால் இந்த மதனிகைகள் பேரில் வைத்த கண்களை எடுத்து விட்டு மேலும் நடப்பது என்பது ரசிகர்களால் முடியாத காரியம். ஆனால் ஒன்று, இந்த அழகிகளையும் வெல்லும் அழகிகள் அல்லவா கோயிலுள் நிற்கிறார்கள் என்ற எண்ணமே, நம்மைக் கோயிலுள் இழுத்துச் செல்லும். கோயிலுள் இருக்கும் நவரங்க மண்டபம், கட்டிடக் கலையில் ஒரு அற்புத சாதனை, இம்மண்டபத்தின் விதானத்திலே ஒரு விரிந்த தாமரை மலர் தொங்குகிறது.

56