பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பாஸ்கரத் தொண்டைமான்



2. அருணகிரியார் கண்ட அழகன்

சமீபத்தில் கோவையில் ஒரு பட்டி மண்டபம் நடந்தது. பட்டி மண்டபத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட பொருள் நிரம்பவும் ரஸமான ஒன்று. கம்பன் கண்ட ராமனில் சிறப்பாயிருப்பது அவனது அழகா, அறிவா, ஆற்றலா? என்று. அழகே என்று வாது செய்தவர் மூவர்; அறிவே என்று மூவரும், ஆற்றலே என்று மூவரும் வாதிட்டனர். எல்லோருமே கம்பனை நன்றாக அலசி ஆராய்ந்து படித்தவர்கள். ஆதலால் திறமையோடு அவரவர் கட்சியை எடுத்துக் கூறி தங்கள் தங்கள் கட்சிக்குப் பலம் தேடினர். அத்தனைக்கும் இடம் கொடுத்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். இந்தப் பட்டிமண்டபத்துக்கு தலைமை வகித்தவன் நான். விவாதங்களை எல்லாம் கேட்டபின் தீர்ப்புக் கூற வேண்டிய பொறுப்பு என்னுடையது. மிகச் சிரமத்தோடேதான் நான் தீர்ப்புக் கூறினேன்.

கம்பன் ராமனை ‘அறிவின் உம்பரான்’ என்று கூறுவது உண்மைதான் என்றாலும், அவனிடத்து அறிவுடைமை சிறப்பாய் அமைந்திருந்தது என்று கம்பன் கருதவில்லை. கருதியிருந்தால், ‘நாயக நீயே பற்றி நல்கலை போலும்?' என்று மாயமானை வேண்டி சீதை கண்ணீர் உகுத்ததும் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு. தம்பியின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது மான் பின்னே ராமன் ஓடினான் என்று கூறி இருப்பானா? மேலும் வாலி மீது அம்பெய்து வீழ்த்தியபின், அவன் கேட்ட கேள்விகளுக்கு, அவன் பேசும் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் சொல்ல இயலாமல் ராமன் திணறுவதை கம்பன் சொல்லாமல்ச் சொல்லி மகிழ்கிறானே. மறைந்து நின்று என்னை நீ எவ்வியது என்னை, என்ற அடிப்படைக் கேள்விக்கு நேரான பதில் சொல்ல அவனால் முடியவில்லையே, இலக்குவன் அன்றோ இடைபுகுந்து நொண்டிச் சமாதானம் கூற வேண்டியிருக்கிறது. இந்த நிலைமையில் கம்பன் கண்ட ராமனிடத்து அறிவு சிறந்திருந்தது என்று கூற வகை இல்லையே என்று முதலில் அறிவை ஒதுக்கினேன்.

பின்னர் ராமன் எவ்வளவு அழகனோ, அவ்வளவு ஆற்றல் நிறைந்தவனே. தாடகை, கரன், கும்பகர்ணன், இராவணன் முதலியவர்களை போரில் வீழ்த்திய ஆற்றல் என்ன சோடையான ஆற்றலா? இல்லை, சீதையை மணம் முடிக்க அரனது வில்லையே