பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

167



அந்த மூளையை கயிற்றால் கட்டினார். கண்ணாடிக் குழாய்க்குள்ளே அதை நுழைத்து தொங்க விட்டார். அந்தக் குழாய்க்குள்ளே அந்த மூளை பல நாட்களாக காய்ந்தது. காய்ந்த மூளையை எடுத்து; தூளாக்கினார். பொடி போல நைந்து போன அந்தத் துளை, தண்ணில் கரைத்துக் கலவையாக்கினார். அந்தக் கலவையை ஊசிமூலம் எடுத்து வெறிபிடித்த சில நாய்கள் உடலினுள்ளே ஏற்றினார். இந்த சிகிச்சை சில நாள்கள் தொடர்ந்தது. இறுதி முடிவு என்ன தெரியுமா?

வெறி நாய்கள் எல்லாம் நல்ல நாய்களாக மாறின. வெறி நோய்களிலே இருந்து அந்த நோய்கள் விடுதலையாயின. இதனால், லூயிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. லூயி பாஸ்டியரின் ஆராய்ச்சியால் வெறி நாயைக் குணமாக்கும் மருந்து மட்டும்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் என்ன பயன்? நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மையில்லையே என்று லூயி பாஸ்டியர் கவலைப்பட்டார்.

மனிதனை வெறி நாய் கடித்தால், அதனால் உண்டாகும் ஜலபீதி அதாவது நீர்ப் பைத்திய வியாதியிலே இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதானே லூயியின் இலட்சியம்?

அந்த எண்ணம் எப்படி வெற்றி பெறும் என்று சிந்தித்தார்! இரவு பகலாக ஏதேதோ யோசனைகள் செய்தும் - அவரது புத்திக்கு அதுவரை ஒன்றும் புலப்படவில்லை. பல விதமான எண்ண மோதல்களுக்கு இடையே லூயி ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, வெறி நாய் மருந்தையே மனிதனுக்கும் பயன் படுத்தினால் என்ன? என்ற வினாவைத் தனக்குள்ளே எழுப்பிக் கொண்டே அலை மோதினார்.

தம்முடைய குறிக்கோளுக்குரிய பலன் கிட்டுமா? அல்லது மனித உடலமைப்புக்கு ஏதாவது கேடு பாடுகள் விளையுமா? தீமைகள் உருவானால் உலகம் நம்மை உதாசினப்படுத்துமே! என்றெல்லாம் குழப்பமடைந்தார்.

இருந்தாலும், மனிதனுக்குப் பயன்படுத்தும் சமயம் வாய்த் தால் பயன்படுத்தித்தான் பார்ப்போமே என்ற சிந்தனையிலே லூயி ஆழ்ந்தார்.