பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

223

கொண்டிருந்த இந்திரன் நகரெங்கும் சிறப்பான அலங்காரங்களைச் செய்யும்படி கட்டளையிட்டான். அர்ச்சுனனை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைக் கோலாகலமாகச் செய்து வைத்தான். தன்னாலும் வெல்ல முடியாதவர்களைத் தன் மகன் வென்று விட்டான் என்று அறிந்த போது அவன் உள்ளத்தில் ஏற்பட்ட பெருமிதமும் திருப்தியும் உவமை சொல்ல முடியாதவை. அமராபதியின் நகரெல்லையிலேயே எதிர்கொண்டு சென்று அர்ச்சுனனை வரவேற்றான். களிப்போடு அவனை மார்புறத் தழுவிக் கொண்டு தேவர்களின் சார்பாகப் பாராட்டினான். நன்றி செலுத்தினான். ஐராவதத்தில் அமரச் செய்து நகர்வலம் செய்தான். தோயமாபுரத்திலும் இரணிய நகரத்திலும் பகைவர்களை வென்ற நிகழ்ச்சிகளை ஆவல் தீரக் கேட்டு அறிந்தான்.

அர்ச்சுனன் இந்திரனோடு இவ்வாறு தங்கியிருக்கும் போது வனத்திலுள்ள தருமன் முதலிய தன் சகோதரர்களைக் காண வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று அவனுக்கு. தன் விருப்பத்தை அவன் இந்திரனிடம் தெரிவித்தான். இந்திரனுக்குத் தன் மகனை அவ்வளவு விரைவில் பிரிய விரும்பவில்லை. இன்னும் சில நாட்கள் தங்கியிருக்கும் படி வற்புறுத்தினான். அர்ச்சுனனைப் பற்றிய செய்திகளை வனத்தில் வசித்து வரும் தருமன் முதலிய சகோதரர்களுக்குக் கூறி வருமாறு ‘உரோமேசர்’ என்னும் பெயரை உடைய தூதுவர் ஒருவர் இந்திரனால் அனுப்பப்பட்டார். அர்ச்சுனனும் இந்திரனுடைய விருப்பத்தை மறுக்க முடியாது. அங்கு தங்கியிருந்தான்.

5. வீமன் யாத்திரை

தீர்த்த யாத்திரைக்காக முன்பு ஒருமுறை அர்ச்சுனன் ‘பாண்டவர் ஐவர்’ என்ற தன்மை மாறித் தனியாக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றிருந்தான். இப்போதும் அதே போலத்தான் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காகத் தவம்