பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51



3. கொல்லி மலை


பெயர்க் காரணம் :

‘கொல்லி மலை’ என்ற பெயர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே வழங்கி வருகின்றது. புறநானுறு, நற்றிணை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி முதலிய நூல்களில் இம் மலை பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. இப் பெயரின் காரணமாகக் கொள்ளக்கூடிய செய்தி ஒன்று உளது. அதுதான் கொல்லிப் பாவை பற்றியதாகும். கொல்லிப் பாவையைத் தன்னிடத்தே கொண்டிருந்த மலை கொல்லி மலை எனக் கொள்ளின் ஏற்புடைத்தாம்.


கொல்லிப் பாவை :

இது கொல்லி மலையில் செய்து வைக்கப்பட்டிருந்த தெய்வப் படிமம். ‘அவுணர் கொடிய போர் செய்யச் சமைத்த போர்க் கோலத்துடன் மோகித்து விழும்படி, கொல்லிப் பாவை வடிவாய்ச் செய்யவளாகிய திருமகளால் ஆடப்பட்ட பாவை என்னுங் கூத்து’ (சிலப். 6 : 60-1) என வருவது கொல்லிப் பாவையின் இயல்பை விளக்கும். சீவக சிந்தாமணியில் விசயைக்குப் பாவையை உவமையாகத் திருத்தக்க தேவர் கூறியதன் நயத்தை விளக்க வந்த நச்சினார்க்கினியர், ‘வேறு கருத்துச் செல்லாமல் தன்னையே கருதுவித்தலின் கொல்லிப் பாவை என்றார்’ எனக் கூறும் விளக்கமும் இதற்கு ஆதரவாகின்றது.

இது கொல்லி மலையில் ஒரு பூதத்தால் அமைக்கப்பட்ட அழகிய பாவை என்பதனைப் ‘பயன் நிறைந்த பலா மரங்களையுடைய கொல்லி மலையின் மேற்பகுதியில்