பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வீடு ஒரு நாள் தாக்குதலுக்குக் கூட ஈடு கொடுத்திருக்க முடியாது.

ஏரி:

ஏர்க்காட்டின் வட பகுதி பச்சைக் கம்பளம் பரப்பப்பட்டாற் போன்ற புல் வெளிகளில் அமைந்துள்ளது. அப் புல்வெளிகளில் நடுவில் பரந்து கிடக்கும் நன்னீர் ஏரி, கண்ணைக் கவரும் வனப்புடையது. இன்பமாகப் பொழுதைக் கழிக்க விரும்புவோர் இதில் தோணியூர்ந்து மகிழ்வார். ஒரு சிறு தொகையைக் கட்டணமாகச் செலுத்திவிட்டு, அவ்வூர் வாழ் வெள்ளையர் மீன் பிடித்துப் பொழுதைக் கழிப்பதும் உண்டு. திரைப்படங்களுக்குரிய காட்சிகள் இங்கு அடிக்கடி எடுக்கப்பெறும். இவ்வேரியிலிருந்து தோன்றும் வாணியாறு, கிளியூர் நீர் வீழ்ச்சியில் தாவிக் குதித்து ஓடும் காட்சியைக் காண்போர் உள்ளம் களி கொள்ளும்.

ஏரிக்கு மேற்கே ஒரு குறுகிய பாதை இந்த நீர் வீழ்ச்சிக்குச் செல்லுகிறது. இவ்வழி மூன்று கல் தொலைவுடையது. மழைக் காலங்களில் ஏரியில் வழிந்து செல்லும் தண்ணிர் மூன்று கல் மேற்காக ஓடி, சுமார் 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுகிறது. இவ்விடத்திற்குச் செல்ல அரைக்கல் தொலைவு செப்பனிட்ட நல்ல பாதை உள்ளது. அது வரையில் உந்து வண்டிகளும், மிதி வண்டிகளும் செல்லலாம். அதற்கு மேல் பாதை சரிந்தும் குறுகியும் உள்ளது.

இவ்வேரியின் நீர் வளத்துக்குக் காரணமாக இருப்பது ஓர் அருவி. இது பழ மலையின் உச்சியிலிருந்து மரங்கள் சூழ்ந்த படுகையின் வழியாக ஓடி வந்து இதில் விழுகிறது. ஏரியின் வட புறத்தில் அமைந்திருக்கும் புனித இளமரக் காட்டில் (Sacred grove) மலையாளிகள் தொழுது வணங்கும் இரண்டு