பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தினைக்கொல்லையை இரவில் காவல் புரியும் கானவன் ஒருவன், யானையின் அடியோசை கேட்டுக் கவண்கல் வீசுகிறான். இரவு நேரமாகையால் யானையை நோக்கி எறியப்பட்ட கல் குறிதவறி வேறு பக்கம் செல்கிறது. அக்கல் வேங்கை நறுமலரைச் சிதறி, ஆசினிப்பலவின் பழுத்த கனியைப் பிளந்து, தேன்கூட்டை உடைத்து, மாவின் பூ, காய் ஆகிய குலைகளைச் சிதறி, மாவிற்கு அருகில் வளர்ந்திருக்கும் வாழையின் மடலைக் கிழித்து, இறுதியாக அதற்கு அருகே இருக்கும் செவ்வேர்ப் பலவின் தீங்கனியைத் துளைத்து உட்சென்று தங்குகிறதாம். என்னே மலைநாட்டின் வளம் !

“இடிஉமிழ்பு இரங்கிய இரவுபெயல் நாடுநாள்
கொடிவிடுபு இருளிய மின்னுச்செய் விளக்கத்துப்
பிடியொடு மேயும் செய்புன் யானை
அடிஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்
கடுவிசைக் கவணையில் கல்கை விடுதலின்
இறுவரை வேங்கையின் ஒள்வீ சிதறி
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிராத்
தேன்செய் இறாஅல் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக்
குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப்
பலவின் பழத்துள் தங்கும் மலை”

இவ்வாறு இயற்கை வளம் செழித்துக் குலுங்கும் மலைநாட்டில் வாழும் மக்களுக்குக் கவலை ஏது? இன்னிசை பாடி வானில் திரியும் வானம்பாடிபோல் இன்ப வாழ்வு வாழ்ந்தனர் மலைவாழ் மக்கள். சுனை நீரில் படிந்து விளையாடி, சோலையில் ஆடிப்பாடிப் பொழுதைக் கழித்தனர். குறிஞ்சித் திணைக்குரிய ஒழுக்கம் புணர்ச்சி. அந்நில மக்களின் காதல் வாழ்வு குறிப்பிடத்தக்கது. புனல் விளையாட்டில் இன்பங் கண்ட ஒரு மலைநாட்டுத் தலைவியின் காதல் அனுபவத்தை அவள் தோழி கூறுகிறாள்.