பக்கம்:மதன கல்யாணி-3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மதன கல்யாணி அதைக் கேட்ட கிருஷ்ணாபுரம் ஜெமீந்தார் ஆனந்தப்பரவச மடைந்து பூரித்துப் புன்முறுவல் செய்து, "ஆகா இந்தக் கிழவனுக்குச் சாகிற காலத்தில் எவ்வளவு பெருமையப்பா! உங்களுக்கெல்லாம் உத்தரவு பிறப்பிக்க நான் என்ன மண்டலேசு வரனா? போகட்டும். நீங்கள் எல்லோரும் கொடுக்கும் பெருமையை நான் வகித்துக் கொள்ளுகிறேன்" என்று கூறிய வண்ணம் சிவஞான முதலியாரது பக்கம் திரும்பிப் புன்னகையோடு அவரது முகத்தைப் பார்த்துவிட்டு மறுபடியும் கல்யாணியம்மாளது பக்கம் திரும்பி, "அம்மணி என்னை நீங்கள் எப்போதும் பார்த்ததில்லை. அதனால், என்னை நீங்கள் செட்டியார் என்று தவறாக இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தது இயற்கையான காரியம். ஆனால் எனக்கு அந்தரங்க நண்பரும் என்னோடு பாலிய காலமெல்லாம் அன்னியோன்னியமாகப் பழகினவருமான நம்முடைய வக்கீல் முதலியார் கூட சில நாட்களுக்கு முன் என்னை செட்டியார் என்றே மதித்து ஏமாறிப் போய்விட்டார். அது தான் எனக்கு மகா ஆச்சரியமாக இருக்கிறது! இருந்தாலும் பரவாயில்லை. இன்றைய விருந்துக்கு நான் இவரையும் அழைக்க வேண்டும் என்ற மரியாதையை இவர் எதிர்பார்க்க மாட்டார் என்று நினைக்கிறேன். நானும் இவரும் உடலிரண்டும் உயிரொன்றுமாக இருந்தவர்கள். ஆகையால் இந்த விருந்து இவருடைய விருந்து (சிவஞான முதலியாரைப் பார்த்து) என்ன முதலியாரே! விருந்துக்கு வருவீர்களா? உங்களுடைய வீட்டுக்கு வந்து நான் அழைக்க வில்லையே என்று வராமல் இருந்து விடுவீர்களா? நான் செட்டியாயிற்றே பழைய கணக்கு மூட்டையை அவிழ்த்துவிடப் போகிறேன் என்ற கவலையே வேண்டாம். எப்போது நான் செட்டி வேஷத்தைக் கலைத்தேனோ அப்போதே பழைய கணக்குகளையும் கலைத்து விட்டேன்" என்றார். அந்த வார்த்தைகள் ஆயிரம் ஈட்டிகள் கொண்டு குத்துவது போல சிவஞான முதலியாரது மனதில் சுருக்கென்று தைத்து ஊடுருவிப் பாய்ந்தன. அவரது முகத்தில் அசட்டுச் சிரிப்பு வழிந்தது. இருந்தாலும், அவர் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரிடத்தில் தாறு மாறாகப் பேசாமல், "இன்றைய தினம் கச்சேரிக்குப் போக வேண்டிய அலுவல்கூட இல்லை. ஆகையால் நான் அவசியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/235&oldid=853377" இலிருந்து மீள்விக்கப்பட்டது