பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

33

 கற்பித்தார். “உனக்கு விருப்பமான எந்தத் தேவர்களை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைக் கூறினாலும் அவர்கள் உடனே உன்னையடைந்து தங்கள் அருள்வலியால் தம்மைப் போலவே அழகும் ஆற்றலும் மிக்க ஓரோர் புதல்வனை உனக்கு அளித்துவிட்டுச் செல்வார்கள். இது உன் வாழ்வில் உனக்கு மிகவும் பயன்படக்கூடிய மந்திரமாகும்” - என்பது தான் துருவாசர் கூறிச் சென்ற வரம். பிரதை அதை நன்றிப் பெருக்கோடு ஏற்றுக் கொண்டாள். இது நடந்து சில நாட்கள் கழிந்திருக்கும். ஓரு நாள் இரவு நிலவு இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. நிலா முற்றத்தில் தன்னந்தனியே அமர்ந்து இரவின் குளிர்ந்த சூழ்நிலையை அனுபவித்துக் கொண்டிருந்த பிரதையின் மனம் என்றைக்குமில்லாத புதுமை யாகக் காரணமில்லாமலே பெரிய மகிழ்ச்சி உணர்வில் சிக்கியிருந்தது. ஏன்? எதற்காக? எப்படி? அந்த மகிழ்ச்சி ஏற்பட்டது என்பது அவளுக்கே விளங்கவில்லை. மேலே முழு நிலவு! மேனியிலே வருடிச் செல்லும் தென்றல் பிரதை இனம் புரியாத ‘போதை’ ஒன்றில் சிக்கினாள். அவள் மனம் காற்றில் மிதக்கும் பஞ்சாக மாறிவிட்டது போலிருந்தது. துருவாசர் கூறிச் சென்ற மந்திரத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இப்போது சிறிது சிறிதாக ஏற்பட்டு முற்றிக் கனிந்தது. மந்திரத்தை மனத்தில் நினைத்தாள். கதிரவன் பெயரைக் கூறி அழைத்தாள். கதிரவன் அவள் முன்பு தோன்றினான்! செம் பொன்னைப் போலக் கொழுந்து விட்டு எரியும் தீயின் நிறத்தில் ஆடை செவியில் ஒளிமயமான கவச குண்டலங்களும் சிரத்தில் வெயிலுமிழும் மணிமுடியும்! தோளில் வாகுவலயங்கள் முன்கையில் கடகங்கள் கம்பீரமான தோற்றம்! பிரகாச கண்களைப் பறித்தது. தன் முன் நிற்கும் ஆஜானுபாகுவான அந்த அழகனைக் கண்டு திகைத்துப் போனாள் குந்தி (நேயர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் விளங்குவதற்காகப் ‘பிரதை’ யை இனிமேல் குந்தி என்ற பெயராலேயே அழைப்போம்.) “பத்மினி! உன் அழகு எனக்கு மயக்க மூட்டுகிறது என் அருகே வா” - என்று கூறியவாறே பவழப்

அ. கு. - 3