பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அறத்தின் குரல்

என்பதை வீட்டுமன் நன்கு அறிவான். இளமை அழகு மாறாத நிலையில் கணவனை இழந்து மங்கலமின்றிக் கவல்கின்ற தம்பியின் மனைவியர்களான அம்பிகை, அம்பாலிகை இருவரையும் காண்கின்ற போதுகளில் எல்லாம் சந்திர வமிசம் குலக் கொழுந்தில்லாமல் ஏமாற்றப்பட்டு விட்டதே என்ற பயங்கர எண்ணந்தான் வீட்டுமனின் மனத்தில் உதிக்கும். வேதனையின் வடிவமே இந்த எண்ணந்தான்! அன்று காவையில் சிற்றன்னை அவனிடம் கூறிய வேறோர் முடிவு இடியோசை கேட்ட நாகம் எனத் திடுக்கிடச் செய்திருந்தது அவனை. தன் உயிரினும் சிறந்ததாக அவன் மேற்கொண்டிருந்த விரதத்தை அழித்துக் குலைப்பதாக இருந்தது அந்த முடிவு. கங்கையில் விழுந்து மாண்டாலும் மாளலாமே ஒழிய அதற்கு இணங்குவதில்லை என்று முடிவு செய்து விட்டான் அவன்.

“குலத்தைத் தொடரச் செய்வதற்கு மக்கட்பேறில்லாத நிலையில் மாண்டவன் மனைவியை அவனுடைய சகோதரன் மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொண்டு வமிசத்தை வளர்க்கலாம்! இதை வேதங்களும் நீதி நூல்களும் அங்கீகரிக்கின்றன. நீயும் இந்த முறைப்படி நடந்து கொண்டால் தான் சந்திர வமிசம் தழைக்க முடியுமப்பா” என்று அவனுடைய சிற்றன்னையாகிய பரிமளகந்தி அவனை வேண்டிக் கொண்டாள்.

“நீங்கள் கூறுகின்ற இந்தச் செயலைச் செய்ய முடியாத விரதமுடையவனாக நான் இருக்கிறேன் தாயே! ஆகவே இதை மறுப்பதற்காக என்னை மன்னித்து விடுங்கள்! இத்தகைய நிலையிலே கணவனை இழந்த பெண்டிர் முனிவர்களால் மக்கட்பேறு அடையலாமென்ற வேறோர் முறை பரசுராமர் காலத்தில் ஏற்பட்டுள்ளது! முனிவர்கள் மூலமாக வேண்டுமானால் உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்” என்று அப்போதே சிற்றன்னைக்கு மறுமொழி கூறிவிட்டான் வீட்டுமன்.