பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

15

நூற்றாண்டினரான பாரதியார் வரை ஐந்து காவிய கர்த்தாக்களையே பாரதம் கவர்ந்திருக்கின்றது. எனவே, ஐவர் காவியம் என்ற தலைப்பு இரண்டு வகையாலும் பொருத்தமானதாகவே அமைந்து விடுகிறது. தருமன் முதல் சகாதேவன் இறுதியாகவுள்ள காவியப் பாத்திரங்களும் ஐவரே. பெருந்தேவனார் முதலாகப் பாரதி இறுதியாக உள்ள பாரதம் பாடிய புலவர்மணிகளும் ஐவரே. இஃது ஐவருடைய காவியம் மட்டுமன்று; தமிழில் ஐவரால் பாடப்பெற்ற காவியமும் ஆகும்.

இந்தத் தொடர்

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற சங்ககாலத்துப் புலவர் ஒருவரைத் தவிர ஏனைய புலவர்களின் காவியங்களே பாரதத்தைப் பற்றி இப்போது நமக்குக் கிடைக்கின்றன என்பதை முன்பே அறிந்தோம். ஐவர் காவியம் என்ற இத்தொடரின் நோக்கம். தமிழிலுள்ள பாரதக் கதைகள் - அனைத்தையும் காவிய ஒப்புநோக்கு முறையில் எளிய இனிய கதைத் தொடராக விமர்சிக்க வேண்டும் என்பதே ஆகும். பாரதக் கதையைப் பற்றி தமிழில் இந்த நூற்றாண்டில் எண்ணற்ற உரைநடை நூல்கள் எழுந்துள்ளன. தமிழ் நாட்டின் மிகச்சிறந்த தலைவர் பெருந்தகையாராகிய இராஜாஜி அவர்கள் வியாச பாரத காவியத்தை ‘வியாசர் விருந்து’ என்ற அரும்பெரும் கலை விருந்தாக அளித்துள்ளார்கள். ஆனால் வில்லி, நல்லாப்பிள்ளை, பாரதி, பெருந்தேவனார் (ஒன்பதாம் நூற்றாண்டு) என்னும் இவர்கள் ஒவ்வொருவரும் இயற்றிய காவியங்களைத் தழுவி அவற்றின் எளிய விமர்சனமாக அமைக்கப்பட்ட பாரத உரைக் கோவை இன்றுவரை எவராலும் எழுதப்படவே இல்லையென்று துணிந்து கூறலாம். தமிழில் இந்த முயற்சி புதுமையும் இனிமையும் பொருத்திய ஒன்றாக அமைவதற்குத் தடையே இல்லை.