பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அறத்தின் குரல்


எளிமையாக வாயாற் கூறிய மாத்திரத்திலேயே நிறைவேற்றி விட்டானே?’ - என்பது தான் அவையினரின் வியப்புக்குக் காரணம். கர்ணனுக்கு முடிசூட்டியவுடன் அவனைத் தன் அருகில் தன் அரியணையோடு சரிசமமாக இடப்பட்டிருந்த அரியணை ஒன்றில் அன்போடு தழுவி அமரச் செய்தான் துரியோதனன். துரியோதனன் எவ்வளவோ வழிகளில் தீயவன் ஆனாலும் நட்பு என்ற இந்தப் பண்பில் மட்டும் அவன் வழி உயரியதாகவே சென்றது. கர்ணனின் நட்புக்காக அவன் செய்த இந்தப் பேருதவியே அதற்குச் சான்று, அரங்கேற்று விழா இவ்வாறாக முடிந்தது.

தம்முடைய மாணவர்களின் திறமை துரோணரின் மனத்தை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. அரங்கேற்றத்திற்குப் பின் மாணவர்களைத் தனியே அழைத்து ஒன்றுகூற விரும்பினார் அவர். இளமைப் பருவத்தில் தனக்கு அரசாட்சியில் பாதி தருவதாகக் கூறிவிட்டுப் பின் மறுத்து அவமானப்படுத்திய யாகசேனனைப் பழிவாங்கும் நினைவு அவருக்கு அப்போது எழுந்தது. “நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய ‘ஆசிரியர் காணிக்கை’ பொன்னோ, பொருளோ அல்லது வேறு பல செல்வங்களோ அல்ல. குருகுலத்து இளைஞர் செல்வங்களே! ‘இளம் பருவத்தில் யாகசேன மன்னன், தான் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து என்னைப் பிற்காலத்தில் அவமானப்படுத்தி விட்டான். அந்த யாகசேனன் இப்போது பாஞ்சால நாட்டு மன்னனாக இருக்கின்றான். அவனை வென்று கைதியாகச் சிறைப் பிடித்துக் கொண்டு வரவேண்டும். இதுதான் நீங்கள் என்னிடம் கற்ற கல்விக்காக எனக்கு அளிக்க வேண்டிய ஆசிரியர் காணிக்கை! என்னுடைய இந்த விருப்பத்தை எப்படியும் நீங்கள் நிறைவேற்றித் தர வேண்டும். அது உங்கள் கடமை.” - என்று தனியே அழைத்துச் சென்று தன் மாணவர்களிடம் கூறினார்.

குருகுலத்துச் சிங்கக் குருளைகளான அந்த மாணவர்கள் அத்தனை பேரும் துரோணரை வணங்கி அவருடைய