பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

95

 கொண்டிருந்த அரண்மனை மண்டபத்தை நோக்கி விரைந்தார்கள். அப்படிப் புறப்பட்டுச் செல்லும் போதும் அவர்கள் முன்பிருந்த அந்தணர் உருவிலேயே இருந்தனர். ‘சந்தர்ப்பமும் வெற்றியும் ஏற்பட்டாலொழிய ‘நீங்கள் யார்?’ என்பதை வெளிபடுத்திக் கொள்ள வேண்டாம்’ -என்று வியாசரின் அறிவுரையை அவர்கள் சிறிதும் மறந்து விடவில்லை. எனவே, அரண்மனைக்குள்ளும் ‘அந்தணர்களாகவே’ நுழைந்தார்கள் அவர்கள்.

12. வெற்றி கிடைத்தது

பிறந்து வளர்ந்து பேதையாய் வாழ்ந்த பருவம் முதல் நினைவு தெரிந்த நாளான அன்று வரை தான் அர்ச்சுனனை மணந்து கொள்வதற்கென்றே பிறந்தவள்’ - என்ற உணர்வைக் கொண்டிருந்தவள் திரெளபதி. சுயம்வர மண்டபத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தோழியர்கள் அவளை அலங்கரித்துக் கொண்டிருந்த போதும் கூட இந்த எண்ணமே அவளுடைய இதயத்தை நிறைத்துக் கொண்ட ஏக உணர்வாக நின்றது. அவளுடைய அந்த உணர்வுக்கு விடை கிடைக்க வேண்டிய நாள் அன்றுதான். சுயம்வர மண்டபம் முழுவதுமே அரசிளங்குமாரர்களால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. திரெளபதி தோழியர்கள் புடைசூழச் சுயம்வர மண்டபத்திற்குள் நுழைந்தாள். அவள் தோற்றமும் அங்கே வீற்றிருந்த வேந்தர்களை அனலில் மெழுகென உருகி மயங்கச் செய்தது. சுயம்வரத்துக்குரிய நிபந்தனைகளைத் திரெளபதியின் தமையன் துட்டத் துய்ம்மன் எடுத்துரைத்தான். அவையிலிருந்த வேந்தர்களின் கவனம் திரெளபதியினிடமிருந்து அவன் பக்கம் திரும்பியது.

அவன் கூறினான் : “அறிவிலும் அழகிலும் கலையிலும் சிறந்த மன்னர்களே! இதோ இந்த மண்டபத்தின் மேலே சுழலும் இயந்திரப் பொறியைப் பாருங்கள். வட்ட வடிவிலும் சூழ ஆரங்கள் அமைந்திருப்பதாகிய இந்தச் சுழல்