பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. மூவர் தோற்றம்

அந்தி மகள் மேலை வாயிலில் வந்து செவ்வண்ணக் கோலங்களைப் பரப்பி உலகை அழகு மயமாகச் செய்து கொண்டிருந்த அந்த இன்பமிக்க மாலை நேரத்தில் வீட்டுமன் மாத்திரம் சோர்ந்த மனத்துடன் கங்கைக் கரையில் அமர்ந்திருத்தான். கங்கைப் பிரவாகத்தின் நீல நிற நீர்ப் பரப்பில் மேலை வானின் செந்நிற ஒளி மின்னி விளங்கும் அழகை அவன் கண்கள் காணவில்லை. சுற்றுப் புறத்தின் கவின்மிக்க எந்தக் காட்சியும் அவனைக் கவரவில்லை! தன்னை மறந்து தான் வீற்றிருக்கும் இடத்தை மறந்து உள்ளத்தோடு சிந்தனையில் ஒன்றிப் போயிருந்தான் அவன். அப்படி அவன் மனதை வாட்டிய அந்தச் சோகம் முற்றிய சிந்தனைதான் எதுவாக இருக்கும்? பிரம்மசரிய விரதத்தால் கவின் கொண்டு மின்னும் அவனது ஒளிமிக்க உடலில் நுழைந்து உடலை அணுக எந்தக் கவலைக்கும் துணிவு இருக்க முடியாதே? பின் ஏன் அவன் கமல வதனம் வாடியிருக்கிறது? கண்களில் அழகொளி இலகவில்லையே? ஏன்? கொடிய நோயால் தம்பி விசித்திர வீரியனின் மரணத்தைக் கண்ட அவன் அந்தத் துன்பத்தைக் கூடப் பொறுத்தான். ஆனால், இரண்டு பெண்களை மணந்து கொண்டு சந்திர வமிசத்திற்குச் சந்ததியைப் படைத் தளிக்காமலே இறந்து போன அவன் தீயூழை நினைக்கிற போது தான் வீட்டுமனுக்குத் துயரம் தாங்கவில்லை. நித்திய பிரம்மசாரியாகிய தான் சந்திரவமிசத்திற்காக இனி எதுவும் செய்ய முடியாதாகையினால், சந்திர வமிசம் தன்னோடு அழிந்து போகுமே - என்பதை நினைக்கவும் முடியாமல் தவித்தான் அவன். சிறிய தாயாகிய பரிமளகந்தியும் மகன் வீட்டுமனைப் போலவே இந்தத் தவிப்பில் ஆழ்ந்து போயிருந்தாள். தன்னைப் போலவே அரண்மனையில் சிற்றன்னையும் சந்திர வமிசத்திற்கு நேர்ந்த இந்தப் பெருந்தீவினையை எண்ணிக் குமைத்து கொண்டிருக்கிறாள்