பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

407

தவறாகப் பட்டு விட்டது. “இந்தச் சல்லியனை எதிர்த்து நாம் போர் செய்து கொண்டிருக்கும்போது பெரிய தந்தை வீணாக இதில் ஏன் குறுக்கிட வேண்டும்? சல்லியனை எதிர்த்துத் தோற்கச் செய்ய என் ஒருவனுடைய ஆற்றல் போதாது என்ற எண்ணமா? அப்படியானால் பெரிய தந்தை என்னுடைய ஆற்றலை மிகவும் குறைவாகத் தானே எண்ணியிருக்கிறார்?” -என்று இவ்வாறாகத் தனக்குள் நினைத்துப் பொருமினான் அவன்.

“பெரிய தந்தையே! நான் உங்களுக்கு என்ன அபசாரம் செய்தேன்? என்னையும் என் வீரத்தையும் தாங்கள் இப்படி அவமானப்படுத்தலாமா?... இந்தச் சல்லியனை ஒடுக்க என் ஆண்மை ஒன்றே போதாதா? தாங்கள் வேறு உதவிக்கு வரவேண்டுமா?” -என்று வீமனை நோக்கிப் பணிவுடனும் வணக்கத்துடனும் கேட்டான் அபிமன்னன். வீமன் சிரித்துக் கொண்டே மறுமொழி கூறாமல் அபிமன்னனை ஏறிட்டுப் பார்த்தான். இவர்கள் இங்கே இப்படி உரையாடிக் கொண்டிருக்கும் போது தேரில் கட்டி வைக்கப்பட்டிருந்த இலக்கணகுமாரன் திருட்டுத்தனமாகக் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு ஓடத் தயாராகிக் கொண்டிருந்தான். துரியோதனாதியர் படையைச் சேர்ந்தவனாகிய ‘கிருத வர்மா’ -என்பவன் இலக்கண குமாரன் தப்பி ஓடுவதற்கான உதவிகளை அவனுக்குச் செய்து கொண்டிருந்தான். வீமனோ அபிமன்ண்னோ தங்களுடைய பேச்சு சுவாரஸ்யத்தில் இதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. கிருதவர்மா இலக்கண குமாரனை ஒரு தேரில் ஏற்றிக் கொண்டு போய் வெகு தொலைவிற்குக் கடத்திக் கொண்டு போய்க் கெளரவ சேனையின் நடுவே பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டான். பேச்சு முடிந்து அபிமன்னனும், வீமனும் திரும்பிப் பார்த்தபோது, இலக்கண குமாரனைக் கட்டி வைத்த இடம் வெறுமையாக இருந்தது! இவ்வளவில் அன்றைய போர் நிகழ்ச்சிகள் முற்றுப் பெற்றன. இரு சாராரும் படைகளோடு தத்தம் பாசறைகளுக்குச் சென்றனர். பதினோராவது நாள்