பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

அறத்தின் குரல்


“தேவீ! தாங்கள் மீண்டும் மீண்டும் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். என் கற்பிற்கு உரிய மரியாதையை நீங்களோ உங்கள் சகோதரனோ அளிக்கத் தவறினால் அதனால் உங்களுக்குத்தான் கெடுதல். தகாத காரியங்களைச் செய்யுமாறு என்னைத் தூண்டாதீர்கள்” என்று ஆத்திரத்தோடு கூறினாள் விரதசாரிணி.

“விரதசாரிணி! நீ என்னை நம்பு! உன் கற்பிற்கு இழிவு உண்டாகும்படியான எந்த ஒரு செயலுக்காகவும் உன்னை நான் தூண்டமாட்டேன். என் சகோதரன் உயிருக்காக இந்த ஓரே தடவை மட்டும் இதைச் செய். இந்த மாலையைக் கொடுத்து விட்டு வந்து விடு! போதும்.” சுதேஷ்ணையின் மறுக்க முடியாத தொல்லையினால் மாலையைக் கையில் வாங்கிக் கொண்டு கீசகனைக் காணப் புறப்பட்டாள் விரதசாரிணி. ‘என் கற்புக்கு உலகை ஒளி செய்யும் கதிரவனே காவலாக அமையட்டும்’ என்றெண்ணிக் கொண்டு சென்ற அவள் கீசகனைக் கண்டு மாலையைக் கொடுத்து விட்டுத் திரும்பினாள். அவள் தோற்றத்தைக் கண்டு உள்ளத்திலும் உடலிலும் வெறி மிகப் பெற்ற கீசகன், அவளைக் கட்டித் தழுவுவதற்காகத் துரத்தினான். திரெளபதி பாய்கிற புலியைக் கண்டு பதறியோடும் மானைப் போல் ஓடத் தொடங்கினாள். கீசகன் விடவில்லை. உள்ளக் கிளர்ச்சியைத் தணிக்க முடியாமல் அவளைப் பின் பற்றி ஓடினான்.

கால்கடுக்க ஓடிய திரெளபதி அரசர்களும் அமைச்சர்களும் கூடியிருந்த அவைக்களத்தில் போய் உடல் பதறிக்கூந்தல் கலைந்து கூனிக்குறுகி நின்றாள். கீசகன் அங்கும் அவளைத் துரத்தாமல் விடவில்லை. எட்டிப் பிடித்து அணைக்கும் ஆசையோடு பாய்ந்தான். திரெளபதியின் கற்பிற்குக் காவலனாகிய கதிரவன் கீசகனைக் கட்டுப்படுத்தி நிறுத்துமாறு ஒரு கிங்கரனைக் காற்று வடிவமாக ஏவினான். விராடராசனின் அவையில் அரூபமாக நுழைந்த அக்கிங்கரன் திரெளபதியாகிய விரதசாரிணியைத் தழுவமுயன்று கொண்டிருந்த கீசகனைத் தொலைவில் தூக்கி எறிந்தான்.