பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

211

நிகழ்ந்தது. திக்குத் திகந்தங்களெல்லாம் வெடி படுதாளத் திடிபடும் ஓசையென ஒலியெழுந்து அடங்கக் கோரமாகப் போர் செய்தனர். அர்ச்சுனனுடைய குத்துக்கள் வேடன் மேலும் வேடனுடைய குத்துக்கள் அர்ச்சுனன் மேலுமாக மாறி மாறி விழுந்தன. வேடன் தன் வலிமையெல்லாந் திரட்டி அர்ச்சுனனைக் கைகளால் தூக்கி மேலே எறிந்தான். வானத்தில் வெகு தூரம் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்த அர்ச்சுனன் உணர்வு தெளிந்து கண் விழித்த போது அவனருகே வேடனில்லை. வேட்டுவச்சியும் இல்லை. வேடர் படைகளும் இல்லை. சிவகணங்கள் புடை சூழ கைலாசபதியாகிய சிவபெருமான் உமாதேவியாருடன் புன்முறுவல் பூத்துக் காட்சியளித்தார்.

அர்ச்சுனன் பக்திப் பரவசத்தோடு எழுந்திருந்து வலம் வந்து வணங்கி அவர்களை வழிபட்டான். ‘தன் தவம் வெற்றியடைந்து விட்டது’ -என்ற எண்ணம் அவனுக்குக் களிப்பைக் கொடுத்தது. சிவபெருமானையும் உமாதேவி யாரையும் நோக்கி மெய் புளகாங்கிதம் அடைய விழிகள் ஆனந்தக் கண்ணீர் சொரிய, நோக்கிய கண் இமையாமல், கூப்பியகை தளராமல் அவன் நின்றுக் கொண்டே இருந்தான். சிவபெருமான் மலர்ந்த முகத்தோடு அவனருகில் வந்தார். மகனை அன்போடு தழுவிக் கொள்ளும் தந்தையைப் போல அவனைத் தழுவிக் கொண்டார்.

“அன்பனே! துரியோதனாதியர்கள் உன்னைக் கொல்வதற்காக ஏவிவிட்ட ‘முகன்’ -என்ற பன்றியை அழித்து உன்னைக் காப்பாற்றி, நீ வேண்டும் வரத்தை அளிப்பதற்காகவே வேடனாக மாறி வந்தேன். நீயும் நானும் விற்போரும் மற்போரும் செய்து திறமையைப் பரிசோதித்துக் கொண்டோம். அஞ்சாமை நிறைந்த உனது வீரத்தையும் தவ வலிமையையும் பாராட்டுகிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்."