பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

அறத்தின் குரல்

அடிபிடியையும் உண்டாக்கிவிடும் போல இருந்தது. நல்ல காலமாகக் கண்ணன் குறுக்கிட்டு அதைத் தடுத்தான்.

“நமக்குள்ளேயே குழப்பம் எதற்கு? முதலில் துரியோதனாதியர்கள் என்ன நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதை ஒரு தூதுவன் மூலம் அறிந்து கொள்ளலாம். இங்குள்ளவர்களில் உலூகன் ஒருவனே தூது செல்லத் தகுதியானவன். எனவே நம் எல்லோருடைய விருப்பத்தின்படி உலூகன் பாண்டவர்களின் சார்பாகத் துரியோதனாதியர்களிடம் தூது சென்று வரட்டும்.”

உலூகன் கண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்கித் தூது சென்றான். கண்ணன் முதலியவர்கள் துவாரகைக்குப் புறப்பட்டனர். துரியோதனன், உலூகனிடம் கூறியனுப்புகிற மறுமொழியைத் தெரிந்து கொண்டு தங்களுக்கு விவரம் அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு வந்திருந்த சிற்றரசர்கள் எல்லோரும் சென்று விட்டனர். தருமனும் கண்ணனும் கூறி அனுப்பிய செய்திகளோடு அத்தினாபுரத்தை அடைந்து துரியோதனனைக் காணச் சென்றான் உலூகன்.

பாண்டவர், கெளரவர் இரு சாராருக்கும் இடையே உலூகன் ஒரு பெருந்தகையாளன், தன் பகைவர்களிடம்மிருந்து வந்தவனென்று அலட்சியமாக இராமல் துரியோதனன் அவனை மரியாதையோடு வரவேற்றதற்குக் காரணம் இது தான். துரியோதனன் மட்டுமில்லை. அவன் அவையைச் சேர்ந்த பெரியோர்களாகிய வீட்டுமன், விதுரன் முதலியவர்களும் கூட உலூகனை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். வரவேற்பு, உபசாரங்கள், எல்லாம் முடிந்த பின் துரியோதனன் உலூகனை நோக்கி, “ஏதோ முக்கியமான செயல் நிமித்தமாகத்தான் வந்திருப்பீர்கள் போலிருக்கிறது. அது என்ன செயல் என்று நான் அறியலாமா?...” என்று கேட்டான். உலூகன் அதற்கு மறுமொழி கூறினான்:

“நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செயல்தான். அதை உங்களிடம் சொல்லி இரண்டில் ஒன்று தெரிந்து