பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

அறத்தின் குரல்


“இது கடமை! நான் என்ன செய்யலாம்? ஆனால் வெற்றி என்னவோ தருமனுக்குத்தான் கிடைக்கப் போகின்றது. இந்தப் போரில் என்னுடைய எதிர்ப்பால் நீங்கள் அதிகம் தொல்லை அடையாமல் இருக்க ஓர் உபாயம் சொல்கிறேன். நான் போர்க்களத்தில் பல அரசர்களுக்கு நடுவே போர் செய்து கொண்டிருக்கும்போது, “உன் மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டான்” என்று யாராவது நம்பத்தகுந்தவர் ஒருவர் வந்து கூறுவதற்கு ஏற்பாடு செய்துவிடுங்கள். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் நான் உடனே வில்லைக் கீழே போட்டுவிடுவேன். அதன்பின் அதைக் கையிலெடுக்கவே மாட்டேன். என்னுடைய இறுதி துட்டத்துய்ம்மன் கை வில்லில் இருக்கின்றது. அதனால்தான் எனக்குச் சாவு நேரிடப் போகிறது. வீட்டுமனும், நானும் இறந்தபின் கெளரவர்களை வெல்ல உங்களுக்கு அதிக நேரம் ஆகவே ஆகாது! நான் என் உயிரைக் கொடுத்த பின்பாவது பாண்டவர்களின் வெற்றியை விண்ணுலகிலிருந்து மானசீகமாகக் கண்டு மனமகிழ்வேன்” -துரோணர் நாத்தழுதழுக்கக் கூறினார். அவருடைய தூயதியாகம் நிறைந்த நெஞ்சம் கண்ணனையும் பாண்டவர்களையும் பேராச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்களை வாழ்த்தினார் துரோணர். எதிர்ப்புறத்துச் சேனையில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து முடித்துக் கொண்டதால் கண்ணனும் பாண்டவர்களும் தேரைத்திருப்பிக் கொண்டு தங்கள் படைகள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றனர்.

இருபுறத்துப் படைத்தலைவர்களும் கடைசி முறையாக அணிவகுப்பைச் சரிபார்த்தனர். படைகளைத் தாக்குதலுக்குத் தயாராக்கி வைத்தனர். போருக்குக் குறித்த வேளை நெருங்கிக் கொண்டிருந்தது, இருதிறத்தாரும் தத்தமக்கு வெற்றியை நல்குமாறு தத்தம் இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டனர். கண்ணன், பாண்டவர்களின் படையின் மலைபோல் குவிந்து நிற்கும் அணிவகுப்புத் தோற்றத்தில் கண்டு வெற்றித்திருவைத் தியானித்து அந்தரங்க சுத்தியோடு வழிபட்டுக் கொண்டான். இருபுறத்திலும் பாம்புக்