பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

229


“அண்ணா ! எங்களுக்கும் துரியோதனாதியருக்கும் ஒரு பெரும்போர் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அந்தப் போரில் உன்னுடைய உதவி எங்கள் பக்கத்துக்குக் கிடைக்க வேண்டும்.'’ வீமன் வேண்டிக் கொண்டான். அனுமன் அந்த வேண்டுகோளுக்கு இணங்கினான். குபேரனின் நகரமாகிய அளகாபுரிக்குச் செல்லுகின்ற வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டபின் வீமன் அனுமனை வணங்கி விடை பெற்றுச் சென்றான். அளகை நகருக்குச் செல்லும் வழியில் வலிமை வாய்ந்த அரக்கன் ஒருவன் வீமனைத் தடை செய்தான். ‘புண்டரீகன்’ என்பது அவன் பெயர். நீண்ட நேரத்துப் போருக்குப் பின் வீமன் அவனைக் கொன்று வெற்றிக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான். அளகாபுரியை அடைந்ததும் தான் எந்தப் பொற்றாமரை மலரைத்தேடி வந்தானோ அந்த மலர் கிடைக்கக்கூடிய சோலை இருக்கும் இடத்திற்குச் சென்றான். குபேரனுடைய ஏற்பாட்டின்படி அந்தச் சோலையை நூறாயிரம் அசுரர்கள் காவல் காத்து வந்தார்கள். சோலையை நெருங்குவதற்குள்ளேயே வீமன் வரவை அந்த அசுரர்கள் உணர்ந்துவிட்டார்கள். உடனே அவர்கள் பரபரப்படைந்து ஒன்றுகூடி அவனுக்கு முன் வந்து உள்ளே நுழைய விடாமல் வழியை மறித்துக் கொண்டு நின்றார்கள்.

“தேவாதி தேவர்களைக் கூட இந்தச் சோலையைக் காணவோ இங்குள்ள மலர்களைப் பறிக்கவோ நாங்கள் அனுமதிப்பதில்லை. நீ யார்? அற்ப மானிடன் இங்கு எதற்காக வந்தாய்?” -அசுரர்கள் அவனை மருட்டினர். வீமனோ அவர்களைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் நின்றான். “நீ மரியாதையாகப் போகிறாயா? அல்லது உன் உயிரைக் கொள்ளை கொள்ளும் முயற்சியில் நாங்கள் ஈடுபடட்டுமா?”

“அசுரர்களே! ஏன் இந்த வாய் முழக்கம்? இவற்றை எல்லாம் கேட்டுப் பயந்து ஓடுகிறவன் நான் இல்லை, இடி முழக்கம் போன்ற குரலில் அரட்டிவிட்டால் எதிரி பயந்து ஓடிவிடுவான் என்று நீங்கள் எண்ணுவீர்களாயின் அது