பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

87

களையும் துயரம் நிறைந்த சூழ்நிலைகளையும் எண்ணி மனத்தை ஆற்றிக் கொண்டனர்.

பின்பு அவர்கள் அந்தணர்கள் போல உருமாறிய தோற்றத்துடன் வேத்திரகீயம் என்ற நகருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்தணர்கள் நிறைய வசிக்கும் அவ்வூரிலே பாண்டவர்களுக்கும் குந்திக்கும் அன்பான வரவேற்புக் கிடைத்தது. ஊரார் போட்டியிட்டுக் கொண்டு பாண்டவர்களை விருந்தினர்களாகப் பேணினர். ஓர் நல்லியல்பு மிக்க அந்தணர் வீட்டில் அவர்கள் அங்கே தங்கி வசிப்பதற்கும் இடம் கிடைத்தது.

11. பாஞ்சாலப் பயணம்

ஓர் நாள் காலைப் பொழுது விடிவதற்கு இரண்டு நாழிகை இருக்கும்போது தாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் எவரோ பலமாகக் கதறியழுகின்ற ஒலியைக் கேட்டுக் குந்தி திடுக்கிட்டாள். முன்பின் அறியாத தாங்கள் வேத்திரகீய நகருக்கு வந்ததுமே தங்களை நம்பி வீட்டில் இடம் அளித்த அவர்களுக்கு எதுவும் துன்பம் ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணிக் கலங்கியது குந்தியின் நெஞ்சம். அவள் மெல்ல அரவமின்றிப் படுக்கையில் இருந்து எழுந்து சென்று அழுகை வந்து கொண்டிருந்த இடத்தை அடைந்தாள். அந்த மங்கலான நேரத்தில் தங்களுக்கு ஆதரவளித்த அந்தணரின் மனைவி உட்கார்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டாள் குந்தி. நன்றி உணர்ச்சியால் நிறைந்திருந்த அவளுடைய இதயம் பதைபதைத்தது. அன்போடு அவள் அந்தப் பார்ப்பனியை நெருங்கி அழுகைக்குரிய காரணத்தை விசாரித்தாள். பார்ப்பனி தனக்கு ஏற்பட்டிருக்கும் துயரத்தை விரிவாக எடுத்துக் கூறினாள்:-

“அம்மா! இன்று நான் என்னுடைய ஓரே மகனை உயிருடனே பறிகொடுக்க வேண்டிய தீவினைக்கு ஆளாக